ஆசிய விளையாட்டு போட்டி நாளை தொடக்கம் இந்தியா அதிக பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Asian Games 2018-08-16

ஜகர்தா,இந்தோனேஷியாவில் நாளை தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா பதக்கம் வெல்ல பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு திருவிழா இந்தோனேஷியாவில் நாளை தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் கபடி, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, தடகளம், பேட்மிண்டன் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியா பதக்கம் வெல்ல பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆசிய கண்டத்தில் நடத்தப்படும் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

45 நாடுகள் இதன்படி 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நாளை (சனிக்கிழமை) தொடங்கி செப்டம்பர் 2-ம் தேதி வரை அரங்கேறுகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த ஏறக்குறைய 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்க இருக்கிறார்கள். மொத்தம் 40 வகையான போட்டிகள் இடம் பெறுகிறது. போட்டியை நடத்தும் இந்தோனேஷியா குறைந்தது 16 தங்கப்பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் 938 பேரை களம் இறக்குகிறது.

572 வீரர், வீராங்கனைகள் ஆசிய கண்டத்தில் மிகப்பெரிய அணிகளில் ஒன்றான இந்தியா இந்த முறை 572 வீரர், வீராங்கனைகளுடன் 36 வகையான போட்டிகளில் அடியெடுத்து வைக்கிறது. 2014-ம் ஆண்டு இன்சியோன் ஆசிய விளையாட்டில் இந்தியா மொத்தம் 57 பதக்கங்களை (11 தங்கம், 9 வெள்ளி, 37 வெண்கலம்) வென்று 8-வது இடத்தை பிடித்தது. இந்த தடவை நிச்சயம் அதை விட அதிக பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முன்னேறுவோம் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பாத்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய குழுவில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள வீரர், வீராங்கனைகள் பற்றி இனி பார்க்கலாம்.

8-வது முறையாக ஆசிய விளையாட்டில் 1990-ம் ஆண்டு கபடி போட்டி அறிமுகம் ஆனது. அது முதல் தொடர்ச்சியாக 7 தங்கப்பதக்கங்களை அறுவடை செய்துள்ள இந்திய அணி கபடியில் அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறது. தோல்வி முகமே பார்க்காத இந்தியா நிச்சயம் 8-வது முறையாக மகுடம் சூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘ரைடு’ செல்வதில் கில்லாடியான அஜய் தாகூர் தலைமையிலான இந்திய அணியில் தீபக் ஹூடா, சந்தீப் நார்வல், பர்தீவ் நார்வல், ரோகித் குமார் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அங்கம் வகிக்கிறார்கள். இந்தியாவுக்கு ஈரான், பாகிஸ்தான், தாய்லாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் கடும் சவால் அளிக்கும். ஆசிய விளையாட்டில் பெண்கள் கபடி 2010-ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. 2010 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் வாகை சூடிய இந்திய பெண்கள் அணி ‘ஹாட்ரிக்’ பட்டத்துக்கு குறி வைத்துள்ளது.

பேட்மிண்டனில் ஆசிய விளையாட்டு பேட்மிண்டனில் இந்தியா இதுவரை தங்கமோ, வெள்ளியோ வென்றது கிடையாது. 8 வெண்கலப்பதக்கம் மட்டுமே கிடைத்திருக்கிறது. இந்த நீண்ட கால சோகத்துக்கு விடைகொடுக்கும் முனைப்புடன் பி.வி.சிந்து, காமன்வெல்த் சாம்பியன் சாய்னா நேவால், ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோர் படையெடுக்கிறார்கள். சமீபத்தில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று பிரமாதப்படுத்திய சிந்து, ஆசிய பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையரில் பதக்கம் ஜெயித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைக்க நல்ல வாய்ப்புள்ளது. இதே போல் சாய்னா, ஸ்ரீகாந்த், இரட்டையர் பிரிவில் அஸ்வினி-சிக்கி ரெட்டி ஆகியோரும் சாதிக்கும் நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆனால் பேட்மிண்டனில் வெகுவாக ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா, ஜப்பான், தென்கொரியா வீரர், வீராங்கனைகளின் ராஜ்ஜியங்களுக்கு அணை போடுவது அவசியமாகும். குறிப்பாக ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங் (சீனதைபே), ஒகுஹரா, யமாகுச்சி (ஜப்பான்) ஆகியோரின் சவாலை முறியடித்தால் பெண்கள் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் சுலபமாகி விடும்.

துப்பாக்கி சுடுதல் இந்தியாவுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு பிரிவு துப்பாக்கி சுடுதல். உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் 2 தங்கம் வென்று வரலாறு படைத்த இந்திய இளம் மங்கை மானு பாகெர், காமன்வெல்த் போட்டியிலும் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். அரியானாவைச் சேர்ந்த 16 வயதான மானு பாகெர் ஆசிய விளையாட்டிலும் அரியணையில் ஏறுவார் என்று உறுதியாக நம்பலாம். அவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் பிஸ்டல் மற்றும் கலப்பு பிரிவில் களம் காணுவதற்கு ஆயத்தமாகி வருகிறார். இதே போல் இளவேனில், ஹீனா சித்து, இளம் வீரர் அனிஷ் பன்வாலா, மனவ்ஜித்சிங் சந்து ஆகியோரும் பதக்கத்தை ‘சுடும்’ வாய்ப்பில் இருப்பதை மறக்க முடியாது.

ஹரேந்திர சிங் அறிவுரை ஆக்கியில் ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய அணியுடன் மேலும் 11 அணிகள் மல்லுகட்டுகின்றன. இதில் பாகிஸ்தான், தென்கொரியா, மலேசியா அணிகள் சோதனை கொடுக்கக்கூடிய அணிகள். ஸ்ரீஜேஷ் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி மகுடம் சூடினால் 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று விட முடியும். எந்த அணியையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆட வேண்டும் என்றும் வீரர்களுக்கு பயிற்சியாளர் ஹரேந்திர சிங் அறிவுரை வழங்கியுள்ளார்.

தடகளத்தில் அதிக கடந்த சீசனில் இந்திய அணி இறுதி சுற்றில் பரம வைரியான பாகிஸ்தானை பதம் பார்த்தது. அதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் வரிந்து கட்டுவதால், ஆக்கி போட்டியில் அனல் பறக்கும். 67 ஆண்டு கால ஆசிய விளையாட்டு வரலாற்றில் இந்தியாவுக்கு அதிக பதக்கங்களை பெற்றுத்தந்த பிரிவு தடகளம். 72 தங்கம், 77 வெள்ளி, 84 வெண்கலம் என்று மொத்தம் 233 பதக்கங்களை கடந்த காலங்களில் இந்தியா அள்ளியிருக்கிறது. இந்த முறையும் தடகளத்தில் இந்தியாவுக்கு குறிப்பிட்ட பதக்கங்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

ஹிமா தாஸ் தொடக்க விழாவில் இந்தியாவுக்கு தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவத்தை பெற்றுள்ள ஈட்டி எறிதல் வீரர் 20 வயதான நீரஜ் சோப்ரா, வலிமையான போட்டியாளராக காணப்படுகிறார். 2016-ம் ஆண்டு நடந்த ஜூனியர் உலக தடகளத்தில் 86.48 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து பிரமிக்க வைத்த அவர், காமன்வெல்த் போட்டியிலும் தங்க மகனாக மின்னினார். அதே உத்வேகத்துடன் ஆசிய போட்டியிலும் கால்பதிக்கிறார். சமீபத்தில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகளத்தில் 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை 18 வயதான ஹிமா தாஸ் 51.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கம் வென்று சரித்திர சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் அசாமை சேர்ந்த ஹிமாதாஸ் ஆசிய போட்டியில் 400 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இந்தியாவுக்கு பதக்கம் இந்தியாவின் அதிவேக ஓட்டப்பந்தய மங்கையான ஒடிசாவைச் சேர்ந்த டுட்டீ சந்த் 100 மீட்டர் ஓட்டத்தில் பதக்கமேடையில் ஏறக்கூடியவர்களில் ஒருவராக தென்படுகிறார். பாலின சர்ச்சையில் இருந்து விடுபட்டு போட்டி மீது முழு கவனம் கொண்டுள்ள டுட்டீ சந்தின் தனிப்பட்ட சிறப்பு 11.24 வினாடி. இதே வேகத்தில் அவர் ஓடினால் அவரது கழுத்தை பதக்க மாலை அலங்கரிப்பதை தவிர்க்க முடியாது. இதே போல் வட்டு எறிதல் வீராங்கனை சீமா பூனியா, 400 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர்கள் முகமது அனாஸ், தமிழகத்தின் ஆரோக்ய ராஜீவ் ஆகியோர் தடகளத்தில் கவனிக்கத்தக்க இடத்தில் உள்ளனர். தொடர் ஓட்டத்திலும் இந்தியாவுக்கு பதக்கம் கிட்டுவதற்கு வாய்ப்பு உண்டு.

டென்னிஸ் போட்டி மல்யுத்தத்தில், ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற சாதனை நாயகன் சுஷில்குமார் (74 கிலோ பிரிவு) பஜ்ரங் பூனியா, சாக்‌ஷி மாலிக், காமன்வெல்த் சாம்பியன் வினேஷ் போகத், குத்துச்சண்டைபோட்டியில் முன்னாள் சாம்பியன் விகாஷ் கிருஷ்ணன், அமித் பன்ஹால், கவுரவ் சோலங்கி, ஷிவ தபா, மனோஜ்குமார், மணிப்பூரைச் சேர்ந்த ‘புதிய சூறாவளி’ சர்ஜூபாலா தேவி, வில்வித்தையில் தீபிகா குமாரி, அபிஷேக் வர்மா, ஜிம்னாஸ்டிக்சில் இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்ற தீபா கர்மாகர் மற்றும் அருணா ரெட்டி, ஸ்குவாஷ் போட்டியில் சவுரவ் கோஷல், மகேஷ் மங்கோன்கர், தீபிகா பலிக்கல், ஜோஸ்னா சின்னப்பா, டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயஸ்-சுமித் நாகல், ரோகன் போபண்ணா-திவிஜ் சரண், பெயஸ்- அங்கிதா ரெய்னா ஜோடி, பளுதூக்குதலில் காமன்வெல்த் சாம்பியனான வேலூரைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் (77 கிலோ பிரிவு) ஆகியோரும் பதக்க வேட்டையில் முன்னணியில் நிற்கிறார்கள். காமன்வெல்த் டேபிள் டென்னிசில் 4 பதக்கங்கள் வென்று சரித்திர நாயகியாக ஜொலித்த மனிகா பாத்ரா மீதும் பலரது கவனம் பதிந்துள்ளது.

அதே சமயம் பெண்கள் குத்துச்சண்டை ஜாம்பவானான மேரிகோம், ஆசிய விளையாட்டில் 48 கிலோ எடைப்பிரிவு இல்லாததால் அதை காரணம் காட்டி விலகி விட்டார். அதே போல் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா கர்ப்பமாக இருப்பதால் ஒதுங்க வேண்டியதாகி விட்டது.


Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து