முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரியில் வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் வரத்து இருக்கும் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, காவிரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் ஏற்படும் விளைவுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டறையில் நேற்று ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அதுல்யமிஸ்ரா, பேரிடர்மேலாண்மை இயக்குனர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கபிணி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து மொத்தம் 2 லட்சம் கன அடி நீர் வினாடிக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீரும் பவானி மற்றும் அமராவதி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரும் இன்று அதிகாலை மாயனூருக்கு பெருக்கெடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மாயனூரை வினாடிக்கு 3 லட்சம் கன நீர் வரத்து இருக்கும். எனவே ஈரோடு, நாமக்கல் திருச்சி, கரூர் அரியலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படியும், நிவாரண மையங்களுக்கு செல்லும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.

மேட்டூர் மற்றும் பவானிசாகர் ஆகிய அணைகளில் 2.65 லட்சம் கன அடி நீர் வரத்து இருக்கும் என்று மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக காவிரி கரையோர மாவட்டங்களான தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், அரியலூர்,கருர் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நீரால் சூழப்படலாம் என்று எச்சரிக்கை எழுந்துள்ளது. முல்லை பெரியார் அணையின் தற்போதைய அளவு 141.3 அடியாகும், அதாவது 7477 மில்லியன் கன அடியாகும், முல்லை பெரியாருக்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 587 கன அடி அளவில் நீர் வரத்து இருக்கும்,

இங்கிருந்து வினாடிக்கு 25 ஆயிரத்து 400 கன அடிக்கு நீர் வெளியேற்றப்படும். வைகை அணையின் அளவு 6 ஆயிரத்து 565 அடியாகும் இதன் அளவு 4 ஆயிரத்து 774 மில்லியன் கன அடியாகும்.

இதிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 941 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. வைகை அணை தற்போது 66 அடி கொள்ளளவை எட்டியுள்ளது. அதன் காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலமாக அறிவுறுத்தப்படுகின்றனர்,ஈரோடு, கன்னியாகுமரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 ஆயிரத்து 410 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 96 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் மக்கள் மற்றும். வாகனங்கள் செல்லும் உயர்மட்ட பாலங்கள் தவிர ஆற்றின் குறுக்கே செல்லும் பாதைகளை அடையாளம் காண்பதற்கு தரைமட்ட பாலங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் காப்பாற்றும் வகையில் பல்துறை மண்டல குழுக்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டங்களில் 16 முகாம்களில் 1724 பேரும், ஈரோட்டில் 66 முகாம்களில் 5875 பேரும், கன்னியாகுமரியில் 10 முகாம்களில் 511 பேரும், கரூரில் 1 முகாமில் 217 பேரும் தர்மபுரியில் 46 பேரும், திருச்சியில் 37 பேரும் தலா ஒரு முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தரமான உணவும் மருத்துவ வசதிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

திருச்சியில் கூடுதல் நீர் வரத்து இருக்கலாம் என்பதால் நிவாரணபணிகளில் ஈடுபட பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே காவிரி கரையோர மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.

அமைச்சர்களும் அதிரடியாக களத்தில் பணியாற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதன் படி அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்டத்திலும், அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் ஈரோடு மாவட்டத்திலும், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் திருச்சி மாவட்டத்திலும் தீவிர ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தந்த மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் களப்பணியாற்றி வருகின்றனர்.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டு நெறிமுறைகளை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். 142 அடி அளவுக்கு அணையை உயர்த்தலாம் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி விரிவான தொழில்நுட்ப அறிக்கையின் அடிப்படையில் பதில் கடிதம் எழுதியுள்ளார். தற்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி சடங்கில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளனர். அவர் சென்னை வந்தபின்னர் உச்சநீதிமன்றம் தற்போது அளித்துள்ள உத்தரவு குறித்து தொழில்நுட்ப வல்லுனர்களை கலந்து பேசி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்.

தற்போது அணைகளில் உள்ள நீர் வரத்து மற்றும் வெளியேற்றப்படும் நீரை சேமிக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். அதற்காக தான் குடிமராமத்து திட்டத்தையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.

இரண்டாவது கட்டமாக ரூ.328 கோடி மதிப்பீட்டில் 1,500 ஆறுகள், ஏரிகள் மற்றும் வாய்க்கால்களை தூர் வாரும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடுக்கி விட்டுள்ளார்.

அதனால் தான் 86 ஆண்டுகளுக்கு பின்னர் மேட்டூர் அணையை தூர் வாரப்பட்டது. அது விவசாயிகளுக்கும் தெரியும் மக்களுக்கும் தெரியும். கடந்த 10 நாட்களாக லட்சக்கணக்கான கனஅடி நீர் பாதுகாப்பாக வெளியேற்றப்படுகிறது என்றால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த குடிமராமத்து திட்டம், தான், ஆறுகள் வாய்க்கால் மற்றும் அணைகளில் மிகுந்திருந்த ஆகாயத்தாமரை அகற்றப்பட்டதால் பெருமளவு தண்ணீர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து