45 நாடுகள் பங்கேற்கும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடக்கம் 572 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Asian Games 2018-08-16

ஜகார்த்தா,45 நாடுகள் பங்கேற்கும் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டி இந்தோனேசியாவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. 572 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டி 1951-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு தென்கொரியாவில் உள்ள இன்சியான்நகரில் நடந்தது. 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டி இந்தோனேசியாவில் இன்று (18-ந்தேதி) தொடங்குகிறது. செப்டம்பர் 2-ந்தேதி வரை தலைநகர் ஜகார்த்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய இடங்களில் இந்தப்போட்டி நடைபெறுகிறது.

ஆசிய விளையாட்டு முதல் முறையாக 2 நகரங்களில் நடத்தப்படுகிறது. 56 ஆண்டுகளுக்கு பிறகு இந்தோனேசியாவில் இந்தப்போட்டி நடக்கிறது. கடைசியாக 1962-ம் ஆண்டு இந்தப்போட்டி அங்கு நடைபெற்றது.

இதில் இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா, கஜகஸ்தான், ஈரான், தாய்லாந்து, சீன தைபே, கத்தார், மலேசியா உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்கின்றன. 42 விளையாட்டுகளில் 482 பிரிவுகளில் நடைபெறும் போட்டியில் 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

ஆசிய விளையாட்டில் 572 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. 36 வகையான விளையாட்டுகளில் கலந்து கொள்கிறது. ஈட்டி எறியும் வீரர் நிரஜ் சோப்ரா தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்.

கபடி, பேட்மின்டன், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பளுதூக்குதல், தடகளம், ஆக்கி, ஸ்குவாஷ், குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டுகளில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

கடந்த முறை ஆசிய விளையாட்டில் இந்திய அணி 11 தங்கம், 9 வெள்ளி, 37 வெண்கலம் ஆக மொத்தம் 57 பதக்கம் பெற்று 8-வது இடத்தை பிடித்து இருந்தது. இந்த முறை அதிகமான பதக்கங்களை குவிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனாவே எப்போதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த போட்டித் தொடரிலும் சீனா பதக்கங்களை குவிக்கும் ஆர்வத்துடன் உள்ளது. அந்த நாடு 879 வீரர், வீராங்கனைகளுடன் இதில் பங்கேற்கிறது.

கொரியா, ஜப்பான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளும் பதக்கங்களை வேட்டையாடும் வேட்கையில் உள்ளன. இன்று தொடக்க விழா இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சோனி டென் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து