நினைத்த காரியத்தை நிறைவேற்றி தரும் ஊட்டி மகா காளியம்மன்

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2018      ஆன்மிகம்
Kaliyammam

Source: provided

ஒரு நாட்டின் பெருமைக்கும், சிறப்புக்கும், உயர்விற்கும் காரணம் அந்நாடு மட்டுமன்று அதில் வாழும் மக்களும், அவர்தம் நாகரிகமும், பயன்பாடும், வாழ்க்கை முறையுமே ஆகும். அந்த வகையில் தமிழ்நாடு சிறந்து விளங்கத் தமிழர்களும், அவர்கள் அமைத்த கோயில்களும், அவர்களின் சமய நம்பிக்கையும், வழிபாட்டு முறைகளுமே காரணமாகும்.

தல வரலாறு

நினைத்த காரியத்தை நிறைவேற்றி பக்தர்களுக்கு நிறைந்த அருளைத்தந்து காத்து வரும் ஊட்டி அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோயில் குறித்த வரலாறு:-
உலகிலேயே தவத்தில் சிறந்த பகுதி தமிழ்நாடாகும். தமிழ்நாட்டு மக்கள் கடவுள் பக்தியில் மிகவும் சிறந்தவர்கள். இமைப்பொழுதும் நெஞ்சிலிருந்து இறைவனை நீங்காது நினைப்பவர்கள். இறை உணர்வானது தமிழக மக்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகும். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. அந்த பழமொழிக்கிணங்க தமிழ்நாட்டு ஊர்களில் எல்லாவற்றிலும் ஆலயங்கள் நிறைந்துள்ளதை நாம் அறிவோம். அந்த வரிசையில் மலைகளின் அரசி எனத் திகழும் ஊட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயில் மிகவும் பெருமை வாய்ந்தது. இத்திருக்கோயிலானது எல்லோரும் எளிதில் வந்து தரிசிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஊட்டி உலக சுற்றுலா ஸ்தலமாக இருப்பதால் இங்கு வரும் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்லாது வெளிமாநிலத்தவர்களும், வெளிநாட்டினரும் இக்கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்துவது குறிப்பிடத்தக்கது.

சக்திமலை

தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களைத் தன்னுள் அடக்கி அப்பகுதியைச் சீதவளநாடு என்றழைத்தனர். குளிர், காற்று, பெருமழை, கடும்பனி யாவும் நிறைந்த இப்பகுதியை சீதாநாடு என்பது பொருத்தமானதே. நாடென்ப நாடா வளந்தரும் நாடு என்ற வள்ளுவர் கருத்திற்கு இணங்க இச்சீதநாடு இயற்கை வளம் நிறையப் பெற்றுள்ள நாடாகும். சீதநாட்டுக்கு அழகு தருவனவாக இரண்டு மலைகள் உள்ளன. ஒன்று வெள்ளியங்கிரி மற்றொன்று நீலகிரியாகும். இவற்றுள் வெள்ளியங்கிரியை சிவன்மலை என்றும், நீலகிரியைச் சக்தி மலை என்றும் வடமொழி கந்தபுராணம் கூறுகின்றது.

மிகப்பழம் தமிழ் நூலாகிய சிலப்பதிகாரத்துள் நீலகிரி பற்றி குறிப்பு உள்ளது. சேரன் செங்குட்டுவன் வடநாட்டு மன்னர்களுடன் போர் புரிய வஞ்சி மாநகரத்திலிருந்து புறப்பட்டு பெரும்படையுடன் சென்றான். அப்போது அவர் நீலகிரி வழியாகச் சென்றான் என்பதனை நாம் சிலப்பதிகார வரிகள் மூலம் நன்கு அறிந்து கொள்ள முடியும்.

3 ஆயிரம் ஆண்டுகள்

நீலகிரி மலைக்குகைகளில் தொல்மாந்தர்களின் பழங்கால ஓவியங்கள் தொல்பொருள் துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் காலம் சுமார் 3000 ஆண்டுகள் எனப்படுகிறது. ஆகவே மூவாயிரம் ஆண்டுகளாக மாந்தரினம் நீலகிரி மலையில் வாழ்ந்து வருவது வரலாற்றால் நன்கு தெரிகிறது.    நீலகிரி மலையானது காட்டுவளம், நீர்வளம், நிலவளம் மிக்கதாய்த் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் கூறுவது போன்று கைபுனைந்தியற்றாக்களின் பெருமை வனப்பு உடையதாகத் திகழ்கிறது. நீலகிரிக்கு மணிமுடியாய்த் திகழ்வது உதகமண்டலம் (ஊட்டி) நகரமாகும். இந்நகரம் நீலகிரி மாவட்டத்தின் தலைநகரம் ஒத்தைக்கல் மந்து என்பது இதன் பழைய பெயராகும்.

மந்து என்றால் மலை என்று பொருள்படும். ஒற்றைக்கல்லில் உருவாக்கப்பட்ட மலை என்பது உதகமண்டலம் என மருவி வழங்குகிறது.  ஊட்டி நகரத்தின் அமைப்பை கூர்ந்து கவனித்து பார்த்தால் ஓங்கார வடிவம் போல் அமைந்துள்ளது தோன்றும். கடந்த 1822-ம் ஆண்டு கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் ஸ்டோன் ஹவுஸ் என்ற பகுதியைக் கண்டறிந்து அங்கு வந்து குடியேறி ஊட்டியைத் தோற்றுவித்தார். எனவே தான் இன்றும் ஸ்டோன்ஹவுஸ் பகுதிக்கு அண்மையில் உள்ள பகுதிக்கு பழைய ஊட்டி என்றழைக்கப்படுகிறது. தொடர்ந்து இங்கு நிலவிய தட்ப வெட்பநிலையை விரும்பிய வெளிநாட்டவர்களும், நம் நாட்டவர்களும் இங்கு வந்து குடியேறியதாகத் தெரிகிறது.

மாரியம்மன் பெருமை

மக்கள் தொகை பெருக பெருக ஊட்டி நகரில் வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகள் பெருகின. இன்றியமையாது வேண்டப்படுகிற வசதி, வாணிகம் பெருகியது. ஊட்டி நகரின் மையப் பகுதியில் சந்தைப் பகுதியை ஓட்டிய இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன், காளியம்மன் திருக்கோயில். சந்தைக்கடை ஓட்டி அமைந்திருப்பதால் இக்கோயிலை சந்தைக்கடை மாரியம்மன் கோயில் என்றும் பக்தர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த மாரியம்மன் கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும்.

 தாயை தெய்வமாக வணங்கும் பழக்கம் மிகப் பழையது நினைவிற்கு எட்டாதது. தாய்வழிச் சமுதாயம் சிறந்து விளங்கிய காலத்தில் தாயே குடும்பத்தின் தலைவியாக விளங்கினாள். அம்மா என்ற தமிழ்ச் சொல்லில் இருந்துதான் சுமேரியர்களுக்கு உமா என்றும், பாபிலோனியர்களுக்கு உம்மா என்றும், ஆர்க்கேடியர்கள் உம்மி போன்ற சொற்கள் தோன்றியுள்ளன என்று அறிஞர்கள் கருதுகின்றனர். சிந்துவெளி நாகரிகத்தில் பெண் தெய்வ வழிபாடு சிறந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. சங்க காலத்தில் இவள் செல்வி என்று அழைக்கப்பட்டாள். பெண் தெய்வம் சக்தியையும், வளத்தையும் தருவதாகக் கருதப்பட்டது. பெண் தெய்வத்தை பெருமோட்டாள் என்று அழைப்பர். பெருமோட்டாள் என்றால் எல்லோரையும் பெற்ற வயிறு என்று விளக்கம் தருகிறார், நச்சினார்க்கு இனியர் என்கிற உரைகாரர்.

ஊருக்கு ஒரு பெண் தெய்வம்

ஊருக்கு ஒரு பெண் தெய்வம் அந்த ஊரையும், ஊர் மக்களையும் காக்கும் என்ற நம்பிக்கை மிகு பழங்காலத்திலிருந்தே எழுந்தது. இத்தேவதை கோயில் வடக்கு நோக்கி கட்டப்படும். ஒவ்வொரு ஊரிலும் காக்கும் தேவதையாகவும், வளத்தின் சின்னமாகவும் பெண் தெய்வக் கோயில்கள் கட்டப்பட்டன. தமிழ்நாட்டில் இவை மாரியம்மன் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. உலகம் இயங்குவதற்கு முதற்காரணமே சக்திதான். வானவெளியாக, வெளியில் வீசும் காற்றாக, காற்றில் இயங்கும் உயிராக மற்றும் மண்ணாக, நெருப்பாக, நீராக ஆக எல்லாமுமாக இருந்து அருள்சுரக்கும் தன்மை அந்த ஆதிபராசக்திக்கு மட்டுமே இருக்கிறது. இதனையே பாவேந்தர் பாரதிதாசன்

எங்கெங்கு காணிணும் சக்தியடா,

 ஏழு கடன் அவள் வண்ணமடா என்று பாடியுள்ளார். அந்த ஆதிபராசக்தி இத்திருக்கோயிலில் மாரியம்மனாக, காளியம்மனாக, காட்டேரி அம்மனாக என முப்பெரும் தேவியாக எழுந்தருளியிருப்பது சிந்தனையை தூண்டி விடும் ஒரு செய்தியாகும். சக்தி என்பது வலிமை என்ற பொருளைத்தரும் சொல்லாகும். அந்த சக்தி இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என மூன்று வகையாக உள்ளது. இச்சை என்பது விருப்பமாகும். விருப்பங்களை அடைந்து திருப்தியாவதற்கு உரிய வகையில் வலிமை தருவது இச்சா சக்தியாகும். கிரியை என்பது வினையாகும். உயிர்கள் இந்த உலகில் முறையாக செயல்படுவதற்கு உரிய வகையில் வலிமை தந்து ஆட்கொள்பது கிரியா சக்தியாகும்.

அதேபோன்று உயிர்கள் இந்த உலகத்தில் விருப்பத்திற்கேற்றவாறு இயங்கி வாழ்ந்து ஓய்ந்த பின்னர் ஞானம் என்ற அறிவுநிலையை எய்துவதற்கு உரிய வகையில் வலிமையைத் தந்து உய்விப்பது ஞான சக்தியாகும்.  ஆக அம்மன் இந்த மூன்று வகையான சக்திகளையும் உயிர்கட்டு, வாரி வழங்குவதற்காகவே ஊட்டி மாரியம்மன் திருக்கோயிலில் மாரியம்மனாகவும், காளியம்மனாகவும், காட்டேரியம்மனாகவும் மூன்று வடிவங்களை தாங்கி ஆட்சி செய்கின்றாள் என்பது உண்மை.

திருக்கோயில் சன்னதிகள்

இக்கோயிலானது பக்தர்களின் வழிபாட்டுக்காக காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை அடையா நெடுங்கதவாகத் திறந்தே இருக்கும் இக்கோயிலில் நான்கு கால பூஜைகள் வேதஆகம முறைப்படி நடைபெற்று வருகிறது. இப்பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு இடையூரின்றி அம்மனை வணங்கி அம்பாளின் அருளைப் பெறலாம். இத்திருக்கோயிலில் அருள்மிகு மாரியம்மன், அருள்மிகு காளியம்மன் இருவரும் மூலஸ்தனத்தில் ஒன்றாக இருந்து காட்சி அளிக்கின்றனர். இங்கு காட்டேரி அம்மனுக்கு தனியாக ஒரு சந்நிதியும் உள்ளது. இந்த சந்நிதியில் குழந்தை இல்லாதவர்கள், குழந்தைப் பேறு வேண்டி தொட்டில் கட்டி வழிபாடு நடத்துவர். அத்துடன் தங்கள் நோய் தீர வேண்டிக் கொள்பவர்களும் உண்டு. தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் காட்டேரி அம்மனுக்கு கோழிக்குஞ்சும், கருப்புப் புடவையும் காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.

இத்திருக்கோயிலில் பிள்ளையார், ஏகாம்பரேசுவரர், காமாட்சி அம்மன், தியாராச பெருமாள், வடிவாம்பிகை, சுப்பிரமணியர், சண்டேசுரர், சப்த கன்னிமார்கள், முனீஸ்வரர், கருப்பண்ணசாமி, நவக்கிரகங்கள், துர்கை முதலிய சந்நிதிகளும் உள்ளன. மாரியம்மன், காளியம்மன் சன்னதிக்கு முன்னர் சிவச்சின்னமான நந்தியெம்பெருமாள் காட்சி தருகிறார். அம்பாளுக்குச் சிங்க வாகனம் தான் அமைக்க வேண்டும். ஆயினும் காளை வாகனம், பெரியோர்கள் அமைந்துள்ளமைக்கு காரணம் ஒன்று இருக்க வேண்டுமல்லவா?

 இங்கு எழுந்தருளியுள்ள கருணாம்பிகையாகிய அன்னை சாந்த வடிவினளாகக் காட்சி அளிக்கின்றாள் என்பதால்தான் தரும வடிவமான நந்தியம் பெருமானை அங்கு அம்மையின் வாகனமாக அமைத்தனர் போலும். சிவபெருமானுக்குரிய ஊர்தியாகிய காளையை சக்திக்கும் ஏற்றதாய் அமைத்திருப்பது மிகவும் பொருத்தமுடையதேயாம். அம்பாளுக்கு மெய்காப்பாளர்களாக துவாலபாலகர்களும் வீற்றிருக்கிறார்கள். இந்த கோயிலில் நவக்கிரக நாயர்கள் தம்பதி சமேதராய் இருப்பது ஒரு சிறப்பாகும்.

திருவிழாக்கள்

இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் மாரியம்மனுக்கு 28 நாட்கள் சிறப்பு உற்சவம், தேரோட்டம் முதலியன நடைபெறுகின்றன. அந்த நாட்களில் அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருவுருவத்தில் துர்க்கையாகவும், காமாட்சியாகவும், பார்வதியாகவும், மீனாட்சியாகவும், புவனேஸ்வரியாகவும், பகவதியாகவும் இன்னும் பற்பல  திருக்கோலங்களில் அலங்காரம் பெற்று திருவீதி உலா எழுந்தருள் புரிவது  கண்கொள்ளாக் காட்சியாகும். தேர்த்திருவிழாவானது ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமை நடைபெறும். திருத்தேரில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அருள்மிகு மாரியம்மனுக்கு அந்நாளில் வெள்ளைச் சேலையை உடுத்தி அலங்கரிப்பர்.

ஆதிநாளில் ஊட்டியில் வாணிபம் செய்த வணிகர்களும், பொதுமக்களும் முதல் முதலில் இரண்டு பெண் தெய்வங்களை கண்டு வணங்கியதாகக் கேள்விப்படுகின்றோமே. அந்த பெண் தெய்வங்கள் தோன்றி காட்சியளித்த நாள் செவ்வாய்கிழமையாகும். அவர்கள் உடுத்தியிருந்த புடவை வெள்ளைப்படவை. எனவே தான் தேர்த்திருவிழா செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. அந்நாளில் அம்மனுக்கு வெள்ளைச் சேலை அலங்காரம் செய்யப்படுகிறது என்றும் கூறுகின்றனர். தேர்த்திருவிழா நாளன்று இங்கு மற்றொரு சிறப்பையும் காண முடிகிறது. தேர் வீதியில் உலாவருகின்ற போது பக்தர்கள் அம்மன் மீது உப்பு வீசுவர். உப்பு நீரில் கரைவது போல் தங்கள் துன்பங்கள் உலா வருகின்ற அம்மன் அருளில் பட்டு நீங்கிட வேண்டும் என்று பக்தர்களின் நம்பிக்கை.

இத்திருக்கோயிலில் தமிழக முதல்வரின் அன்னதான திட்டம் நாள்தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நினைத்த காரியத்தை நிறைவேற்றி பக்தர்களுக்கு நிறைந்த அருளைத் தந்து காத்து வரும் ஊட்டி அருள்மிகு மகாமாரியம்மன், மகா காளியம்மன் திருக்கோயிலில் செயல் அலுவலராக பொன்.சி.லோகநாதன் நிர்வகித்து வருகின்றனர்.

அன்புராஜன்,  ஊட்டி.

 

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து