முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.500 கோடி நிதி - பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

கொச்சி : கேரளாவில் தென்மேற்கு பெருமழையால் ஏற்பட்ட சேதங்களையும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களையும் பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார். அதை தொடர்ந்து இடைக்கால நிவாரணமாக ரூ. 500 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

பார்வையிட்டார்...

நேற்று காலை தனி ஹெலிகாப்டர் மூலம் வெள்ளச் சேதங்களைப் பார்வையிட பிரதமர் மோடி புறப்பட்டார். ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களில் வானிலை மிகவும் மோசமாக இருந்ததையடுத்து, ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில், வானிலை சீரடைந்ததைத் தொடர்ந்து வெள்ளச் சேதங்களை அவர் பார்வையிட்டார். கேரளாவில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 29-ம் தேதி தொடங்கியது. ஆனால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிரமடைந்து மாநிலத்தில் பெருமழை கொட்டித் தீர்த்து வருகிறது. ஏறக்குறைய 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. மழையின் கோரத் தாண்டவதத்துக்கும், வெள்ளத்துக்கும், நிலச்சரிவுக்கும் இதுவரை 324-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். ஏராளமானோரைக் காணவில்லை. மழைவெள்ளம், நிலசரிவு தொடர்பான சம்பவங்களில் நேற்று மட்டும் 22 பேர்

பலியாகியுள்ளனர்.

பிரதமர் மோடி வந்தார்...

2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். இவர்கள் அரசு ஏற்பாடு செய்துள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களும், தனியார் அமைப்புகளும் கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்நிலையில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி, நேற்று முன்தினம் இரவு கொச்சின் நகரத்துக்கு தனிவிமானம் மூலம் வந்து சேர்ந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று முடித்தபின் இரவே தனி விமானம் மூலம் கொச்சி விமானப்படைத் தளத்துக்கு பிரதமர் மோடி வந்தார்.

தரையிறக்கம்...

அவரை முதல்வர் பினராயி விஜயன், நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், ஆளுநர் பி. சதாசிவம் உள்ளிட்டோர் வரவேற்றனர். நேற்று காலை பிரதமர் மோடி, முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளச் சேதங்களைப் பார்வையிடுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்பின் படி  கொச்சி விமானப்படைத் தளத்தில் இருந்து, ஹெலிகாப்டர் மூலம் வெள்ளச்சேதத்தை பார்வையிட பிரதமர் மோடி உள்ளிட்டோர் புறப்பட்டனர். ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களில் வானிலை மோசமாக இருந்ததால், தொடர்ந்து ஹெலிகாப்டர் பயணிக்க முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து, உடனடியாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.

உயர்மட்ட ஆலோசனை

அதன்பின், பிரதமர் மோடி, முதல்வர் பினராயி விஜயன், தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின் கேரள மாநிலத்துக்கு ரூ.500 கோடியை இடைக்கால வெள்ள நிவாரணமாக மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். ஏற்கெனவே மத்திய அரசு ரூ.100 கோடி அறிவித்திருந்தது, அதன்பின் ராஜ்நாத் சிங் பார்வையிட்டு முடித்தபின், கூடுதலாக ரூ.80 கோடியை மத்திய அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தலா ரூ.2 லட்சம் நிதி...

ஆனால், கேரள மாநிலத்தில் வெள்ளத்தால், ரூ.19 ஆயிரத்து 512 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார். இதற்கிடையே மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து