முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீர்: ஓ.பி.எஸ். திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

ஆண்டிபட்டி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி அணை மதகுகளை திறந்துவைத்தார்.

வைகை அணைக்கு கடந்த சில ஆண்டுகளாக போதிய நீர்வரத்து இல்லை.

இதனால் அணை முழு கொள்ளளவை எட்டவில்லை.

கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு அணை நிரம்பியது.

அதைத் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக நீர் வரத்து இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டதோடு, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டில் கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.

இதனால், முல்லை பெரியாற்றில் இருந்து 2,200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கம்பம், போடி பகுதிகளில் இருந்து வரும் சிற்றோடைகள் மற்றும் மூல வைகையாற்று பகுதியில் இருந்து வரும் நீரின் மூலம் வைகை அணைக்கு 3,336 கன அடி நீர் வரத்து உள்ளது.

இதனால் வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.

அணையில் 66 அடிக்கு நீர் உயர்ந்ததையடுத்து, முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிகை விடப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அணையின் நீர் மட்டம் 68.5 அடியை அடைந்ததையடுத்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் வைகை அணை 69 அடியை எட்டியதை அடுத்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அணைக்கு வரும் 3,336 கன அடி உபரி நீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.

இதனிடையே, வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன்படி வைகை அணை நேற்று திறக்கப்பட்டது.

அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி அணை மதகுகளை திறந்து வைத்தார்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கதர் மற்றும் கிராமத்தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இது குறித்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறுகையில், தமிழக அரசு வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று, வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப் பகுதியில் ஒரு போக பாசன நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், மதுரை மாவட்டம், பெரியாறு பாசனப் பகுதியில் ஒருபோக பாசன பரப்பான 85,563 ஏக்கர் நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசனப் பரப்பான 19,439 ஏக்கர் நிலங்களுக்கும் என மொத்தம் 1,05,002 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 1130 கனஅடி வீதம் மொத்தம் 8461 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் இருப்பைப் பொருத்து வைகை அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மதுரை மாவட்டத்திற்குட்பட்ட வாடிப்பட்டி வட்டத்தில் 6,898 ஏக்கர் நிலங்களும், மதுரை வடக்கு வட்டத்தில் 24,811 ஏக்கர் நிலங்களும், மேலூர் வட்டத்தில் 48,963 ஏக்கர் நிலங்களும், உசிலம்பட்டி வட்டத்தில் 13,723 ஏக்கர் நிலங்களும், திருமங்கலம் வட்டத்தில் 4,369 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 98,764 ஏக்கர் நிலங்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை வட்டத்தில் 199 ஏக்கர் நிலங்களும், சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் வட்டத்தில் 478 ஏக்கர் நிலங்களும், சிவகங்கை வட்டத்தில் 5,561 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 6,039 ஏக்கர் நிலங்களும், மேலும், மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்.

தற்போது தென்மேற்கு பருவமழையையொட்டி பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் மூல வைகை ஆற்றுப்பகுதிகளில் கணிசமான அளவு மழை பெய்து வருவதாலும், விவசாயித்திற்கு ஏற்ற இயற்கை சூழ்நிலை நிலவுவதால் இதனை வேளாண் பெருங்குடிமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து