முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் அட்வைஸ்

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளாமல் அரைகுறை புள்ளி விவரங்களுடன் அறிக்கை விடாமல், தனது அரசியல் பயணத்தை ஆக்கப்பூர்வமாக்கி கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் அறிவுரை கூறியுள்ளார்.

இது குறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சரும், அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளருமான ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

உண்மைக்கு புறம்பாக...
தமிழக விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகரிக்க, அம்மா வழியில் சிறப்புடன் பணியாற்றிவரும் அ.தி.மு.க. அரசின் நீர்ப்பாசனத் திட்டங்களையும், அத்திக்கடவு - அவினாசி திட்டத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அறைகுறை புள்ளி விவரங்களுடன் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை உண்மைக்கு புறம்பானதாகவும், காழ்ப்புணர்ச்சிகளின் மொத்த வடிவமாகவும் உள்ளது.

வீராணம் ஏரி...
சம்பா பயிறுக்கு தேவைப்படும் நீரை முன்கூட்டியே விவசாயப் பெருங்குடி மக்களுக்கு வழங்கும் வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

காவேரி டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் காவேரி நீர் சென்றடையும் வகையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மேற்பார்வையில் தூர்வாரும் பணிகளும், நீர் மேலாண்மைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, இப்பொழுது காவேரி பாயும் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தங்கு தடையின்றி சென்று கொண்டிருக்கிறது. காவேரி ஆற்றில் மிகுந்த அளவில் வந்துகொண்டிருக்கும் தண்ணீரை முழுமையாக பயன்படுத்தும் வகையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி அதி.மு.க. அரசால் நன்கு தூர்வாரப்பட்டு, அது தனது முழு கொள்ளளவை எட்டும் அளவிற்கு தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக வீராணம் ஏரியில் இருந்து கடந்த இரண்டு வாரங்களாக சென்னைக்கு குடிநீர் கொண்டுவரப்பட்டு மக்களின் தாகம் தணிக்கப்படுகிறது. வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் பெறும் விவசாயிகளுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.

அறைகுறை அறிக்கை...
இந்த உண்மையை ஏன் திரையிட்டு மறைக்க முயல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்?கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் பெறும் காவேரி ஆறு, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகிய ஆறுகள் அவற்றின் முழு கொள்ளளவில் நீரை கொண்டு செல்லும் வகையில் வினாடிக்கு 23,000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டிருக்கிறது.

இதனால் இந்த மூன்று பெரும் பாசன ஆறுகளால் பயன்பெறும் விவசாயப் பெருங்குடி மக்கள் அரசை நெஞ்சாரப் பாராட்டிய வண்ணம் உள்ளனர். இதனைப் பொறுக்க முடியாமல் தங்களுக்கே உரித்தான குறுகிய அரசியல் ஆதாய மனநிலையோடு அறைகுறை அறிக்கை ஒன்றினை யாரிடமிருந்தோ எழுதி வாங்கி எதிர்க்கட்சித் தலைவர். ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

7 பாசன வாய்க்கால்கள்...
அதி.மு.க. அரசு மேற்கொண்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக கரூர், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் 19 பாசன கால்வாய்களில் வினாடிக்கு 4,200 கனஅடி தண்ணீரும், அணைக்கரை என்று அழைக்கப்படும் கும்பகோணம் அருகில் உள்ள கீழ் அணையில் இருந்து 7 பாசன வாய்க்கால்கள் மூலம் கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வண்ணம் வினாடிக்கு 2,700 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டு, இப்பொழுது அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் வேளாண்மை பணிகளை விரைந்து மேற்கொண்டிருக்கின்றனர்.

அ.தி.மு.க. , அரசுக்கு விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கும் பேரன்பைத் தாங்கிக்கொள்ள முடியாத தவிப்பு மு.க. ஸ்டாலின் பெயரில் வெளியாகி இருக்கும் அறிக்கையில் தெரிகிறது.

 தெரிந்திருக்க வேண்டாமா?
இந்த ஆண்டு வான் மழை வாரி வழங்கி இருக்கும் மிகுதியான நீரை சேமித்து விவசாயிகளுக்குப் பயன் அளிக்கும் வகையில் அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 924 குளங்கள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

புதிய நீர் மேலாண்மைத் திட்டங்களை அரசுக்கு வகுத்தளிக்க, ஓய்வு பெற்ற பொறியியல் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டு, அதன் முதல் கூட்டம் முடிவடைந்து அந்தக் குழு அரசுக்கு அளித்த ஆலோசனைகள் சிறப்புடன் செயல்படுத்தப்பட அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இந்த உண்மை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிந்திருக்க வேண்டாமா?

அடிப்படை உண்மைகளை....
தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் மற்றும் அணைக்கட்டுகள் கட்டுவதற்காக 1,000 கோடி ரூபாய் மதிப்பில் பெரும் திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டு அதன் முதற்கட்டமாக, தற்பொழுது 74 தடுப்பணைகளும், 7 அணைக்கட்டுகளும் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.

தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு நதிகளிலும், பாசன கால்வாய்களிலும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள, உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் நிதி உதவியுடன் தொடர் நிகழ்வாக நடைபெற்று வரும் திட்டங்களை தூர்வாரும் பணியோடு ஒப்பிட்டு குழம்பிப்போய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின். ஒரு முன்னாள் துணை முதல்வர் அறிக்கை வெளியிடும் முன்னர் அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டாமா?

காரணமாவது தெரியுமா?
அத்திக்கடவு - அவினாசி திட்டம் 1,652 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட அ.தி.மு.க. அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டில் காவேரி ஆற்றினை அக்னியாறு - தெற்கு வெள்ளாறு - மணிமுத்தாறு - வைகை குண்டாறு ஆகியவற்றுடன் இணைக்கும் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்கு சுமார் 6,994 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள், பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

காவேரி ஆறும், அதன் கிளை நதிகளும் இன்ன பிற டெல்டா பாசன நதிகளும் ஒரு வினாடிக்கு 30,000 கனஅடி நீரை மட்டுமே பாசனத்திற்கு கொண்டு செல்ல இயலும். அந்த அளவையும் தாண்டி தண்ணீர் வருகின்ற போது, அது தொடர்ந்து அவற்றின் வழியாக அனுப்பப்பட்டால் அது வெள்ள பெருக்கைத் தான் ஏற்படுத்துமே தவிர பாசனத்திற்குப் பயன்படாது.

எனவே தான் காவேரி பெருக்கெடுத்தால் கொள்ளும் இடமாக கொள்ளிடம் ஆறு திகழ்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கொள்ளிடம் ஆற்றின் இந்தப் பெயர் காரணமாவது தெரியுமா?
களங்கம் கற்பிக்க முயற்சி...

பல ஆண்டுகளுக்கு ஒரு முறை பருவ மழை ஏராளமாக பொழியும் பொழுது, பெருக்கெடுத்து வரும் வெள்ள நீர் கொள்ளிடம் போன்ற ஆறுகள் வழியாக வங்காள விரிகுடா கடலைத்தான் சென்றடையும். இது போல, வரலாற்றில் கடந்த கால கட்டங்களில், தி.மு.க ஆட்சிக் காலம் உட்பட ஏராளமாக வெள்ள நீர் கடலைச் சென்றடைந்துள்ளது. 2000-மாவது ஆண்டில் 385 டி.எம்.சி. தண்ணீர் வங்கக் கடலில் சென்று கலந்தது. 2008-வது ஆண்டில் 114 டி.எம்.சி தண்ணீர் கடலுக்குத் தான் சென்றது. என்னவோ இந்த ஆண்டுதான் தண்ணீர் வழிந்தோடி கடலுக்குப் போவதாக கற்பனை கதை கட்டி, களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார் மு.க. ஸ்டாலின்.

ஆக்கப்பூர்வமாக ஆக்கி...
திருவாரூரில் உள்ள ஐநூற்று பிள்ளையார் கோவில் குளத்தில் இப்பொழுது தண்ணீர் இல்லை என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை கூறுகிறது. இந்த ஐநூற்று பிள்ளையார் கோவில் குளத்தைச் சுற்றிலும் வீடுகள் கட்டப்பட்டுவிட்டதால் கடந்த 25 ஆண்டுகளாக அந்தக் குளத்தில் வரத்துக் கால்வாய்கள் வழியாக எப்பொழுதும் தண்ணீர் நிரம்பியதே இல்லை. வான் மழை மூலம் நேரடியாகப் பெறும் தண்ணீர் தான் அந்தக் குளத்தில் நிரம்பியிருக்கிறது.

இந்த உண்மை தெரியாமல் குளத்தில் தண்ணீர் இல்லை என்று கூப்பாடு போடுகிறது மு.க.ஸ்டாலின் பெயரில் வந்துள்ள அறிக்கை. எல்லாவற்றிலும் அரசியலைக் கலந்து, ஆதாயம் தேட மீண்டும், மீண்டும் முயற்சித்து தோல்வி பள்ளத்தாக்கில் துவண்டு விழும்.

மு.க.ஸ்டாலின் தன்னுடைய அரசியல் பயணத்தை ஆக்கப்பூர்வமாக ஆக்கிக் கொள்வது அவசியம். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து