முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.700 கோடி - ஐக்கிய அரவு அமீரகம் உதவி - முதல்வர் பினராயி விஜயன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி வழங்கப்படுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

வீடுகளுக்கு திரும்பினர்...

கேரளாவில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட வரலாறு காணாத சேதத்தை தீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவால் ஏற்பட்ட இயற்கை பேரழிவை கருத்தில் கொண்டு தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறி இருக்கிறது.  பல இடங்களில் வெள்ளம் நீரில் வடிந்து வருவதால் மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்து, சுத்தம் செய்யத் தொடங்கி உள்ளனர்.  10.28 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 2.12 லட்சம் பெண்கள் மற்றும் ஒரு லட்சம் குழந்தைகள் இதில் அடங்குவர். இவர்கள் அனைவரும் 3784 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த மழை வெள்ளத்தால் 11 ஆயிரம் வீடுகள் முழுவதுமாக இடிந்து நாசமாகிவிட்டது. இதனால் பலர் தங்கள் வீடுகளுக்கு மீண்டும் திரும்ப முடியாத நிலை உருவாகி உள்ளது. இந்த இழப்பில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் அவர்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஏராளமான வீடுகள் பெரும் சேதத்துடன் காணப்படுகிறது. வீடு முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. பாம்பு உள்பட வி‌ஷ ஜந்துகளும் குடியேறி இருந்தன.

ரூ.1,100 கோடி வரை...

கோழிக்கோடு, மலப்புரம், காசர்கோடு, பத்தனம்திட்டா, கண்ணூர் போன்ற இடங்களில் அதிகளவிலான வீடுகள் இடிந்துள்ளன. கண்ணூர் அருகே குட்டநாடு பகுதியில் ஒரு கிராமமே ஆற்று வெள்ளத்தில் மூழ்கி விட்டது. இங்கும் வீடுகள் இருந்த இடமே தெரியாதபடி உள்ளது. 26 லட்சம் வீடுகளில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. 46 ஆயிரம் ஹெக்டேர் விவசாய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. இதன் மூலம் 2 லட்சத்து 80 ஆயிரம் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். ரூ.1,100 கோடி வரை விவசாயம் மற்றும் வீடுகள் இடிந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முழுவீச்சில் பணிகள்

கடந்த 6 நாட்களில் மட்டும் 251 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.  வெள்ளக்காடாக மாறிய கேரளாவில் ஏராளமான கால்நடைகளும் பலியாகி உள்ளன. தற்போது வெள்ளம் வடிந்துவரும் நிலையில் ஆங்காங்கே கால்நடைகள் செத்து மிதக்கின்றன. ஏராளமான மாடுகள், ஆடுகள் அழுகிய நிலையில் கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் சுகாதார பணிகளும் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

மழை வெள்ளம் புகுந்ததால் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்க முடியாத நிலை உருவானது. இதனால் அந்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தை வருகிற 26-ந்தேதி முதல் மீண்டும் திறந்து விமான சேவையை தொடங்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது.  தற்போதையை நிலவரப்படி கோழிக்கோடு, பத்தனம் திட்டா, கண்ணூர் மாவட்டங்களில் மட்டும் லேசான மழை பெய்து வருகிறது. மீனவர்கள் வருகிற 23-ந்தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

பினராய் நன்றி

இதற்கிடையே கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி  வழங்கப்படுகிறது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். இதற்கு ஐக்கிய அரபு அமீரகம் அரசுக்கு நன்றி தெரிவித்து உள்ளார். கேரளம் புனர்வாழ்வளிக்கும் திட்டத்தின் கீழ்  மறுசீரமைக்கப்பட வேண்டும். பருவ மழையைப் பற்றி விவாதிக்க இந்த மாதம் 30-ம் தேதி கூட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து