துவரிமான், கீழமாத்தூர் மற்றும் கொடிமங்கங்கலம் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் மதுரை கலெக்டர் வீரராகவராவ் ஆய்வு

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018      மதுரை
mdu pro news

மதுரை-மதுரை மாவட்டம், மதுரை மேற்கு சட்ட மன்றத்தொகுதிக்குட்பட்ட துவரிமான், கீழமாத்தூர் மற்றும் கொடிமங்கங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்,  ஆய்வு மேற்கொண்டார்.
 திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், துவரிமான் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா காலனியில் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப கழிவுநீர் வாய்க்கால் அமைக்கவும், இரண்டு தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கவும், சேதமடைந்த கழிவு நீர் வாய்க்காலினை சீரமைக்கவும், செயல்படாமல் உள்ள தெருவிளக்கினை சீரமைக்கவும், தூய்மைப்பணி மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டு, பொதுமக்களிடம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.  திருமதி.பாண்டியம்மாள், திருமதி.நல்லதங்காள் மற்றும் திருமதி.முருகாயி ஆகிய முதியவர்களுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை உடனடியாக வழங்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.  துவரிமான் கிராமத்தில் பொதுமக்களிடம் நியாயவிலைக்கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் உணவுப்பொருட்கள் சீராக வழங்கப்படுகின்றனவா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.  துப்புரவு பணி மேற்கொள்ள கூடுதலாக பணியாளர்களை நியமித்து துப்புரவுப்பணி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
 கீழமாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வலையர் தெருவில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  அதனைத்தொடர்ந்து தூய்மையாக பராமரிக்காமல் நடத்துப்பட்டு வந்த தேநீர் கடை உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம் விதித்தார். 
 கொடிமங்கலம் ஊராட்சிக்குபட்ட கொடிமங்கலம் கிராமத்தில் மேல்நிலை தண்ணீர் தேக்கத்தொட்டியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேலே ஏறிச்சென்று தண்ணீர் தூய்மையாக சேமித்து வைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  உரிய அனுமதியின்றி வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை கண்டறிந்த உடனடியாக துண்டிப்பதற்கும், தாராப்பட்டி கிராமத்தில் ஆண்கள் சுகாதார வளாகத்தினை உடனடியாக பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படி மாவட்ட ஆட்சித்தலைவர்   உத்தரவிட்டார்.
 இந்த ஆய்வில் ஊரகவளர்ச்சித்துறை செயற்;பொறியாளர்  .செல்வராஜ்  , உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)  .லெட்சுமி  , வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  .சோனாபாய்  ,  .முருகன் அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து