18-ஆம் கால்வாய் , பி.டி.ராஜன் கால்வாய், பெரியார் கால்வாய் பாசனத்திற்காக தண்ணீரினை முல்லை பெரியார் அணையிலிருந்து ஓ.பி.எஸ். திறந்து வைத்தார்

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018      தேனி
pos news

தேனி- 18-ம் கால்வாய், பி.டி. ராஜன் கால்வாய் மற்றும் பெரியார் கால்வாய் பாசனத்திற்காக தண்ணீரினை முல்லை பெரியாறில் இருந்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட கலெக்டர் ம.பல்லவி பல்தேவ், மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் டி.ஜி.வினய் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தண்ணீரை திறந்து வைத்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசுகையில்:-
தென்மேற்கு பருவமழையினையொட்டி முல்லை பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறிலிருந்து பதினெட்டாம் கால்வாயின் மூலம் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட பண்ணைப்புரம், கோம்பை, க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, சே.சிந்தலைச்சேரி, தேவாரம், கிருஷ்ணம்பட்டி, வெம்பக்கோட்டை, திம்மிநாயக்கன்பட்டி, பொட்டிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள 29 கண்மாய்கள் மூலம் 2,045.35 ஏக்கர் நிலங்களும், போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்ட டொம்புச்சேரி, மீனாட்சிபுரம், கோடாங்கிபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள 15 கண்மாய்கள் மூலம் 2,568.90 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 44 கண்மாய்கள் மூலம் 4,614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அம்மாவால் அறிவிக்கப்பட்டு 27.02.2016 அன்று அம்மாவால்  காணொலிக்காட்சி மூலம் இப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. 18-ஆம் கால்வாயினை சுத்தகங்கை ஓடையிலிருந்து கூவலிங்க ஆறு வரை நீட்டித்து கொட்டக்குடி ஆற்றுடன் இணைக்கும் திட்டப்பணிகள் இந்தாண்டு 2018 மார்ச் மாதத்தில் முடிவுற்றதையடுத்து சோதனை அடிப்படையில் வினாடிக்கு 200 கன அடி வீதம் 7 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து, பி.டி.ராஜன் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் மூலம் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட சின்னமனூர், சீப்பாலக்கோட்டை, வேப்பம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள 830 ஏக்கர் நிலங்களும், தேனி வட்டத்திற்குட்பட்ட சீலையம்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, தாடிச்சேரி, வெங்கடாசலபுரம், கொடுவிலார்பட்டி, ஜங்கால்பட்டி, கோவிந்தநகரம், பாலகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள 4,316 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும் என மொத்தம் 5,146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் பொருட்டு 100 கனஅடி வீதம் 120 நாட்களுக்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 இந்நிகழ்வின் போது, உடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர். பார்த்திபன், எம்.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள்; எஸ்.டி.கே. ஜக்கையன், பி. நீதிபதி, வி.வி. ராஜன் செல்லப்பா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், பெரியாறு வைகை வடிநிலகோட்ட செயற்பொறியாளர்; (நீர் வள ஆதார அமைப்பு) சுப்பிரமணியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.எம்.சையதுகான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.கணேசன், மாவட்ட கோ-கோ விளையாட்டு கழகத்தலைவர் ஓ.ப.ரவீந்திரநாத்குமார் மற்றும் வேளாண்குடி பெருமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து