ராமநாதபுரம் மாவட்ட அரசுப்பள்ளி; தலைமையாசிரியர்கள்; பணி ஆய்வு கூட்டம்

வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2018      ராமநாதபுரம்
rmd pro news

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் பணி குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
 ராமநாதபுரம்; செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியில் அரசுப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்; பணி குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:- பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்வி வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும்.  அந்த வகையில் 2018-2019ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  2018ஆம் ஆண்டு அரசு பொதுத்தேர்வு முடிவுகளின் படி மாணவ, மாணவியர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதத்தில் நமது மாவட்டம், பன்னிரண்டாம் வகுப்பில் மாநில அளவில் நான்காமிடமும், பத்தாம் வகுப்பில் மாநில அளவில் ஐந்தாமிடமும் பெற்றுள்ளது.  இது 2017ஆம் ஆண்டு முடிவுகளை ஒப்பிடுகையில் சற்று பின்னடைவான சூழ்நிலையாகும். இதனை சரிசெய்திடும் வகையில்; ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி நடப்பு கல்வியாண்டில் நமது மாவட்டம் மாநில அளவில் முதன்மை மாவட்டமாக வர செய்திட வேண்டும். 
 மேலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் நலனையும், பாதுகாப்பினையும் உறுதி செய்வது நமது கடமையாகும்.  எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலை அரசுப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, கழிப்பறைக்கான தண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் நூறு சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதை உறுதி செய்திட வேண்டும். இத்தகைய அடிப்படை வசதியில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்துறை அலுவலர்களிடத்தில் (வட்டாரவளர்ச்சி, பேரூராட்சி, நகராட்சி) தகவல் தெரிவித்து உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இதுதவிர, வகுப்பறைகள் இயங்கும் கட்டிடங்கள் பாதுகாப்பு தன்மை குறித்து தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். தேவைக்கேற்ப மராமத்து பணிகளை உடனடியாக மேற்கொண்டு சீர்செய்திட வேண்டும்.  அதேவேளையில் கட்டிடத்தின் உறுதித்தன்மை, மிகவும் மோசமாக இருப்பின், அது தொடர்பான விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்து மாணாக்கர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இவை அனைத்தும் ஒவ்வொரு தலைமையாசிரியர்களின் தலையாய கடமையாகும்.
 மேலும்,  ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டிற்கு மாவட்டம் முழுவதிலும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.  எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலை அரசுப்பள்ளிகளிலும் இது போன்ற பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்ப்பதை நூறு சதவீதம் உறுதி செய்திட வேண்டும். மாணவ, மாணவியர்களுக்கு பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.  மாணவ, மாணவியர்கள் மூலமாக அவர்களது பெற்றோர், குடும்பத்தார் மற்றும் சுற்றத்தாரிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திட முடியும். இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.முருகன் உள்பட அனைத்து அரசுப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து