குடகு உள்ளிட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை:கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் நீர்திறப்பு அதிகரிப்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2018      இந்தியா
Mettur Dam  2018 7 23

பெங்களூர்,கர்நாடகாவில் குடகு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அம்மாநில அணைகளில் இருந்து மீண்டும் நீர்திறப்பு அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் மழை குறைந்ததால் கடந்த 2 நாட்களாக அம்மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கர்நாடகத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 32,660 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

 மீண்டும் காவிரியில் வெள்ளம்

கபினி அணையில் இருந்து 11,458 கனஅடியும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 21,202 கனஅடியும் திறக்கப்படுகிறது. இதனால் தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 17,000 கனஅடியில் இருந்து 24,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவும் 17,000 கனஅடியில் இருந்து 21,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.


இதைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 15,000 கனஅடியில் இருந்து 20,742 கனஅடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த நீர்வரத்து, நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது.

இதனால் மேட்டூர் அணையில் இருந்து 20,800 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 ஆகவும். நீர்இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.


இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த முக்கொம்பு மேலணையை சீரமைக்கும் பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் சுமார் 300 ஊழியர்கள் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.

எனவே இரண்டொரு தினங்களில் பாலம் சரி செய்யப்பட்டு அங்கு போக்குவரத்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

மழை பெய்யவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த மதுரைவாழ் மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் கடந்த 2 நாட்களாக மதுரையில் மழை பெய்து வருகிறது.

கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு  மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து