பிரதமர், அதிபருக்கும் சலுகை மறுப்பு முதல் வகுப்பில் விமான பயணம் செய்யக் கூடாது அரசு உயரதிகாரிகளுக்கு இம்ரான்கான் அரசு தடை
இஸ்லாமாபாத், பாகிஸ்தானில், உயரதிகாரிகள் அரசு செலவில் முதல் வகுப்பு விமானப் பயணம் மேற்கொள்வதற்கு இம்ரான் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு தடை விதித்துள்ளது.
பிரதமர் இம்ரான் கான் தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பாவத் செளத்ரி கூறியதாவது:-
பிரதமர், அதிபர் உள்ளிட்ட எந்த அரசுத் துறை உயரதிகாரிகளும், அரசின் செலவில் முதல் வகுப்பு விமான பயணம் மேற்கொள்வதற்குப் பதில் இரண்டாவது வகுப்பிலேயே பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று இம்ரான் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்தது.
அதுமட்டுமன்றி, சொந்த செலவுகளுக்காக பிரதமர், அதிபர் மற்றும் பிற உயரதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைத் தொகையையும் ரத்து செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இத்தகைய சலுகைத் தொகை மூலம் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆண்டுக்கு ரூ.5,100 கோடியை தனது சொந்த செலவுகளுக்காகப் பயன்படுத்தியுள்ளார் என்று தெரிவித்தார் அவர்.
பிரதமர், அதிபர் போன்ற தலைவர்களுக்கும் இந்த சலுகை மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.