கோடை குறிஞ்சி விழா அரசு விழாவாக நடத்தப்படும்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2018      திண்டுக்கல்
kodaikanal news

 கொடைக்கானல்--கொடைக்கானலில் இனி வரும் காலங்களில் நடைபெறும் குறிஞ்சிப் பூ விழா அரசு விழாவாக நடத்த சட்டம் இயற்றப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
 கோடை குறிஞ்சி விழா, பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு ஆகிய இரு விழாக்கள் கொடைக்கானலில் நடந்தது. இந்த இரு விழாக்களிலும் அமைச்சர் கலந்து கொண்டு பேசியதாவது: அரசின் திட்டங்களை எவ்வாறு மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று திண்டுக்கல் ஆட்சியர் தெரிந்து வைத்து செயல்படுத்தி வருகின்றார். பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமையை தவிற்க சனல் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
 குறிஞ்சி மலர் என்ன நிறத்தில் இருக்கும் என்று பலருக்கும் தெரியாது. 12 வருடத்திற்கு இந்த பூக்கள் சரியாக பூக்கின்றது என்றால் இறைவனின் சக்தியால்தான் இது சாத்தியம். வட மாநிலங்களில் பல சுற்றுலா இடங்கள் உள்ளது. சிம்லா, டார்ஜலிங், குளுமனாலி, இவற்றை விட சிறந்த சுற்றுலா இடம் கொடைக்கானல்தான், ஊட்டி தற்போது கமர்சியல் இடமாக மாறிவிட்டது.
 கொடைக்கானலில் தற்போது முதன் முறையாக கோடை குறிஞ்சி விழா நடைபெறுகின்றது. வரும் காலங்களில் இந்த விழா அரசு விழாவாக நடத்த சட்டம் இயற்றப்படும்.
 அரசின் திட்டங்களை மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கொடைக்கானல் ஒன்றிய பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 392 பணிகள் 45 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் கொடைக்கானல் வந்த முதல்வர் துவக்கி வைத்த பணிகள் கொடைக்கானல் பகுதியில் நடைபெற்று வருகின்றது. இவ்வாறு அவர் பேசினார்.
 முன்னதாக கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியினை அமைச்சர் துவக்கி வைத்தார். பின்னர் கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் குறிஞ்சிப் பூ பூங்காவினை திறந்து வைத்தார். இதை அடுத்து கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் அமைக்கப்பட்ட குறிஞ்சிப்பூ பற்றிய புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்தார்.
 இதன் பின்னர் கொடைக்கானல் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் குறிஞ்சி மலர் கையேடு, கொடைக்கானல் சுற்றுலா கையேடு, கோடை குறிஞ்சி நாள்காட்டி, குறிஞ்;சி பூ வீடியோ, கோடை குறிஞ்சி விழா தபால் தலை ஆகியவற்றை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வெளியிட்டார். இதன் முதல் பிரதிகளை திண்டுக்கல் கலெக்டர் டாக்டர் வினய் பெற்றுக்கொண்டார்.
 இந்த விழாக்களுக்கு திண்டுக்கல் கலெக்டர் டாக்டர் வினய் தலைமை தாங்கினார். கொடைக்கானல் நகராட்சி ஆணையர் முருகேசன் வரவேற்றார். இந்த விழாவில் திண்டுக்கல் எம்.பி. உதயகுமார், டி.ஆர்.ஓ. மாவட்ட திட்ட அலுவலர் கவிதா, டி.எப்.ஒ. தேஜஸ்வி, முன்னாள் எம்.எல்.ஏ வேணுகோபாலு, ஆர்.டி.ஓ மோகன், முன்னாள் நகர் மன்றத் தலைவர் ஸ்ரீதர், பி.ஆர்.ஓ. சாலிதளபதி, ரோட்டரி சங்க தலைவர் செல்வகுமார், செயலாளர் தனசேகர், முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் ரோகன் சாம்பாபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து