பட்டாசு தொழிலின் பாதுகாவலராக திகழும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2018      விருதுநகர்
ktr news 1

சிவகாசி, - தமிழக முதல்வரின் இடைவிடாத முயற்சிகளின் மூலம் பட்டாசுத் தொழில் பாதுகாக்கப்பட்டுள்ளதால், அத்தொழிலின் பாதுகாவலராகவே தமிழக முதல்வர் போற்றப்படுவதாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் நடைபெற்ற பட்டாசு வணிகர்களின் மாநில மாநாட்டைத் துவக்கி வைத்து அவர் பேசியதாவது:-
உலகம் முழுவதிலும் உள்ள மனிதர்கள் அனைவரின் மனம் மகிழ்ச்சியடையும் போதெல்லாம் அதை பட்டாசுகளை வெடித்துத் தான் வெளிப்படுத்துகின்றனர். ஒலிம்பிக் விளையாட்டு முதல் ஆசிய விளையாட்டுக்கள் வரை அனைத்து விழாக்களிலும் வானவேடிக்கைகளை நடத்தித்தான் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த அளவுக்கு உலக மக்களின் மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது என்பது பின்னிப் பிணைந்திருக்கின்றது.
இந்தியாவின் ஒட்டு மொத்தப் பட்டாசுக்கான தேவையில் 90 சதவீதம் சிவகாசி பகுதியில் இருந்து தான் தயாராகிச் செல்கிறது. சிவகாசி பகுதி மக்களின் உழைப்பை நேரில் கண்ட நேரு இந்த நகருக்கு குட்டி ஜப்பான் என்று பெயர் சூட்டினார். ஆனால் அவ்வப்போது இந்தத் தொழிலுக்கு சிலரால் இடையூறுகள் வந்து கொண்டு தான் இருக்கின்றது. பட்டாசால் மாசு ஏற்படுவதாகக் கூறி சிலர் நீதிமன்றத்தின் மூலம் இத்தொழிலை அழிக்க முனைந்துள்ளனர். இந்த தொழில் மூலம் மொத்தம் ஒரு கோடி பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். அவர்களது அச்சத்தை தமிழக முதல்வரிடம் எடுத்துரைத்தோம்.
அவர் உடனடியாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி இத்தொழிலைப் பாதுகாப்பதன் அவசியத்தை விரிவாக வலியுறுத்தினார். அதுடன் நில்லாமல் பாரளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை அவர்களைத் தொடர்பு கொண்டு கழக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு மத்திய அமைச்சர்களைச் சந்தித்து பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க உத்தரவிட்டார். அதன்படி நானும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் அவர்களும் பட்டாசு தொழிலதிபர்களுடன் டெல்லி சென்று அனைத்து கழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று மத்திய அமைச்சர்களைச் சந்தித்து இத்தொழிலைப் பாதுகாக்க கோரிக்கை மனுக்களை அளித்து வந்தோம். தற்போது உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக முதல்வரே நேரடியாகத் தலையிட்டு மிகவும் திறமையான சட்டவல்லுனர்களை தமிழக அரசின் சார்பாக வாதாட வைத்தார். அவர்களும் பட்டாசு தொழிலைப் பாதுக்காக்க தங்கள் வாதங்களை ஆணித்தரமாக உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைத்துள்ளனர்.
இவ்வாறு பட்டாசு தொழிலை அழிவில் இருந்து பாதுகாக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை தமிழக முதல்வர் எடுத்து வருவதால் அவரைப் பட்டாசு தொழிலின் பாதுகாவலர் என்றே இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
எனவே, பட்டாசுத் தொழிலுக்கு ஆபத்து ஏற்படுவதை நல்லாட்சியின் நாயகன் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியாரின் தலைமையிலான அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மாநாட்டில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மு.ராசராசன், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயகுமார், சிவகாசி கோட்டாட்சியர் தினகரன், பட்டாசு தொழிலதிபர்கள் அய்யன் ஜி.அபிரூபன், பயோனியர் எஸ்,மகேஷ்வரன், சோனிபி.கணேசன், ஆறுமுகா ஏ.மாரியப்பன், காளீஸ்வரி ஏ.பி.செல்வராஜன், லார்டு ஏ.ஆசைத்தம்பி, சிவகாசி நகர செயலாளர் அசன்பத்ருதீன், ஒன்றியச் செயலாளர் புதுப்பட்டி வி.ஆர்.கருப்பசாமி, திருத்தங்கல் நகரச் செயலாளர் பொன்.சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.என்.பாபுராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் பங்கு பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து