முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலைதளத்தில் எழுதுவது முதலீட்டை அதிகரிக்காது: ஜெட்லிக்கு காங்.பதிலடி

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : வலைதளத்தில் எழுதுவதால் நாட்டில் முதலீட்டை அதிகரிக்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

"நாட்டின் பொருளாதார வளர்ச்சி-2011' அறிக்கை இந்த மாதத் தொடக்கத்தில் வெளியானது. அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சிக்காலத்தில், 2006-07ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10.08 சதவீதம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 1991ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தாராளமயமாக்க நடவடிக்கைக்குப் பிறகு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த அளவு அதிகரித்திருந்தது இதுவே முதன்முறை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமற்ற அறிக்கை என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்த அறிக்கை விவாத நிலையிலேயே தற்போது இருப்பதாகவும், விரிவான விவாதத்துக்குப் பிறகு, அந்த அறிக்கையை ஏற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், சுட்டுரையில் காங்கிரஸ் மூத்த செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டிருப்பதாவது:

முந்தைய அரசின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி தொடர்பான அறிக்கையை திரிக்கவும், மறைக்கவும் மோடி அரசு மேற்கொண்ட முயற்சி தற்போது வெளியே தெரிந்து விட்டது. உண்மையை யாராலும் மறைக்க முடியாது. அது நிச்சயம் ஒரு நாள் வெளிவந்தே தீரும்.

காங்கிரஸ் அரசு நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பான நிலையில் விட்டு சென்றிருந்தது. அதை நெருக்கடியில் மோடி அரசு தள்ளிவிட்டது. நாட்டில் முதலீடு குறைந்து விட்டது.

2011-12ஆம் நிதியாண்டு காலக்கட்டத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில், மொத்த நிலையான மூலதன உருவாக்கம் 34.3 சதவீதமாக இருந்தது. இது 2013-14ஆம் நிதியாண்டில் 31.3 சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த மூன்றாண்டு காலக்கட்டத்தில், இது 28.5 சதவீதமாக குறைந்து விட்டது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதித்துள்ளது.

வலைதளத்தில் எழுதுவதால் நாட்டில் முதலீடு அதிகரிக்காது. வேகமாக முன்னேற்ற பாதையில் சென்ற நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியது மத்திய பாஜக அரசுதான் என்பதை ஜேட்லி தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு பாஜகவின் தற்காலிக மற்றும் குறுகிய நோக்க கொள்கைகள், பணமதிப்பிழப்பு, குறைபாடுகளையுடைய ஜி.எஸ்.டி வரி அமல், வரி தீவிரவாதம் ஆகியவையே காரணமாகும்.

மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது, இரண்டாவது அரசுகளின் ஆட்சிக்காலத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.13 சதவீதமாக இருந்தது. இதுவே, சுதந்திர இந்தியாவில் அதிக பொருளாதார வளர்ச்சி என்பது நிதர்சன உண்மையாகும். ஆனால், பிரதமர் மோடி அரசின் ஆட்சியின்கீழ், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2017-18ஆம் நிதியாண்டில் 6.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 4 ஆண்டுகளில் மிகவும் குறைவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து