மாணவிகள் தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடைவிதிக்க மறுப்பு: 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி - மூல வழக்கு விசாரணை நவம்பரில் நடைபெறும்

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      தமிழகம்
supreme court 2017 8 3

புது டெல்லி : தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சென்னையை சேர்ந்த மாணவிகள் தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோரட் மறுத்துவிட்டது. மேலும் இதுதொடர்பான மூல வழக்கு நவம்பர் மாதம் விசாரணைக்கு வர உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அவ்வப்போது இடைக்கால உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

மாணவிகள் வழக்கு...

இதற்கிடையே சென்னையைச் சேர்ந்த மாணவிகள் சஞ்சனா, அகிலா அன்னபூர்ணி ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

கூடுதல் இடங்கள்...

இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்திற்கும் கூடுதலாக இருக்கக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு மாறாக 69 சதவீத  இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, மாணவர்களில் ஒரு பிரிவினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக 19 சதவீத கூடுதல் இடங்களை உருவாக்க ஆணை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த ஆண்டும் அதே போன்று கூடுதல் இடங்களை உருவாக்க ஆணையிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி விசாரணைக்கு வந்த போது, அந்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். அதேநேரத்தில் தமிழகத்தில் இட ஒதுக்கீட்டின் அளவை 50 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்துவது பற்றி தனியாக மனு செய்யும் படியும், அதை விரைவாக விசாரித்து முடிவெடுக்கலாம் என்றும் அப்போது சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.

தள்ளுபடி செய்தது...

அதன்படி தான் 69 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்று அறிவிக்கக் கோரி சஞ்சனா, அகிலா அன்னபூர்ணி ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. நேற்று  இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. காயத்ரி என்பவர் 2007ம் ஆண்டு, 69 சதவீத எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மூல வழக்கு, நவம்பர் மாதத்தில் விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து