கேரள நிவாரண முகாம்களில் உள்ள மக்களிடம் ராகுல் நேரில் ஆறுதல்

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      இந்தியா
DAMU 9 PIC

திருவனந்தபுரம்,கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

கேரளாவில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோரை முப்படை வீரர்கள் மீட்டனர். மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு நிவாரணப் பொருட்களும், உணவுகளும் வழங்கி காப்பாற்றினர். இந்த நிலையில் நிவாரண முகாம்களில் சுமார் 8 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்ப தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று வருகை தந்தார். திருவனந்தரம் விமான நிலையத்துக்கு வந்திறங்கிய அவரை காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னர் செங்கனூரில் பாதிக்கப்ட்ட மக்களை அவர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதைத்தொடர்ந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பின்னர் எர்ணாகுளம், ஆலுவா உள்ளிட்ட இடங்களில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். நேற்று இரவு கொச்சியில் தங்கிய அவர், அங்கிருந்து இன்று மற்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசவுள்ளார்.

பின்னர் இன்று மாலை கோழிக்கோட்டில் இருந்து ராகுல் விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து