எதிர்க்க வேண்டிய விஷயங்களை எதிர்த்தோம் : மத்திய அரசு சொல்வதற்கு எல்லாம் நாங்கள் தலையாட்டுவது கிடையாது - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பதிலடி

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      தமிழகம்
CM Edapadi1 2017 9 3

சிதம்பரம் : எதை எதிர்க்க வேண்டுமோ அதை எதிர்த்தோம். மத்திய அரசு சொல்வதற்கு எல்லாம் நாங்கள் தலையாட்டுவது கிடையாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சியினருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பாதிப்பு இல்லை...

சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேலும் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் வெள்ளப் பாதிப்பு இல்லை. பல்வேறு அணைகள் நிரம்பியிருக்கின்றன. மேட்டூர் அணையை பொறுத்தவரைக்கும், 8000 அடி தான் வந்து கொண்டிருக்கிறது. பவானிசாகர் அணையும் நிரம்பியிருக்கிறது. அங்கு பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, முல்லைப் பெரியாறு அணையிலும் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவுதான் இருக்கிறது. அங்கேயும் பாசனத்திற்குத் தேவையான நீர் திறக்கப்பட்டிருக்கிறது.  அதுமட்டுமல்லாமல், மழை வெள்ளம் அதிகமாக வருகின்றபொழுது, அதைக் காப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, ஆங்காங்கே, இந்திய ஆட்சிப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள், அவர்கள் அந்தப் பணியை மேற்கொண்டு இருக்கிறார்கள். 

தடுக்க முடியாது...

கடந்த காலத்தில் வெள்ளம் வந்தபொழுது, எவ்வாறு பணி மேற்கொள்ள வேண்டும், வெள்ளத் தடுப்பு எவ்வாறு மேற்கொள்ள வேண்டுமென்பதெல்லாம் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு, அந்தப் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மழை என்பது நாம் நினைப்பது போல் வருவதில்லை. அதிக மழை பெய்கின்றபொழுது ஏற்படுகின்றது இயற்கை சீற்றம், அதை யாராலும் தடுக்க முடியாது. ஆகவே, நாம் குறிப்பிட்ட அளவு தண்ணீர் வெளியேற்றும் அளவிற்கு நாம் வடிகால்  வசதி செய்திருக்கிறோம். எல்லா பகுதிகளிலும், உலகெங்கிலும் அப்படித்தான். நீங்கள் பார்த்தீர்களானால், இந்த சிதம்பரம் வீதியில் இரண்டு பக்கமும் நான்கு அடி அகலத்தில் டிரெய்னேஜ் கட்டியிருக்கிறோம், அது ஒரு குறிப்பிட்ட அளவு பெய்கின்ற மழைநீரைத்தான் அது உள்வாங்கி செல்ல முடியும், அளவுக்கு மீறி மழை பெய்கின்ற பொழுது, அது சாலை வழியாகத்தான் செல்ல முடியும், வெள்ளப் பெருக்கு ஏற்படுவது இயற்கை.

கேள்வி: தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கை குறித்து ... 
பதில்: தமிழகத்தில் பொதுப்பணித்துறை சார்ந்த ஏரிகள், உள்ளாட்சித்துறை சார்ந்த ஏரிகள் ஆக  மொத்தம் 40000 ஏரிகள் இருக்கின்றன,  பெரிய ஏரி, சிறிய ஏரி எல்லாம் இருக்கின்றன. நீங்கள் சொல்வதைப் போல, பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் முழுமையும் சேமித்து வைக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில், குடிமராமத்து என்ற திட்டத்தை உருவாக்கி, முதல்கட்டமாக பரிட்சார்த்த முறையிலே 1519 ஏரிகளை எடுத்து, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அந்தப் பணியை துவக்கினோம், அது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி ...

விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள், இந்தத் திட்டத்தை வரவேற்றார்கள்.  மேலும், இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தவேண்டும் என்ற அவர்களது கோரிக்கையை ஏற்று, அம்மாவினுடைய அரசு, இந்த ஆண்டு 328 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தப் பணிகள் துவங்கப்பட்டிருக்கின்றன. இந்த குடிமராமத்துத் திட்டத்தை பார்வையிடுவதற்காகவும், ஆய்வு செய்வதற்காகவும், இந்திய ஆட்சிப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது முழுக்க, முழுக்க விவசாயப் பிரதிநிதிகளைக் கொண்டு அமைப்பின் மூலமாக இந்தக் குடிமராமத்துத் திட்டம் எடுத்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

பொறுத்துக் கொள்ள...

கேள்வி:   நீங்கள் எதுவுமே செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்களே?
பதில்: இதற்கு முன்பு இந்தத் திட்டத்தை கொண்டு வந்தார்களா? பொறுக்க முடியவில்லை. ஏனென்றால், இது மிகவும் சிறப்பான திட்டம், மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது, விவசாயிகளிடத்தில் வரவேற்பு இருக்கின்றது.  அம்மாவினுடைய அரசு போட்ட இந்த குடிமராமத்துத் திட்டத்தின் வாயிலாக, பல்வேறு ஏரிகள் ஆழப்படுத்தியதன் விளைவாக, தூர்வாரப்பட்டதன் விளைவாக, சீரமைத்ததன் விளைவாக பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமித்து வைக்கக்கூடிய சூழ்நிலை இன்றைக்கு இருக்கின்றது.  இதையெல்லாம் பார்த்து அவர்களுக்கு பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

அவர்கள் காலத்தில் எந்தத் திட்டமும் செய்யவில்லையே, நாங்கள் தானே இந்தத் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். படிப்படியாக, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட அளவு ஏரியை எடுத்து, சிரமைக்கின்ற பணியை விவசாயிகளிடத்திலே கொடுத்து அந்தப் பணியை மேற்கொள்கிறோம். இதுவரைக்கும், டெண்டர் தான் விட்டார்கள்.  இதற்கு டெண்டர் கிடையாது, முழுக்க முழுக்க அந்த ஏரிக்குட்பட்ட பாசன விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மூலமாக இந்தக் குடிமராமத்துப் பணியை நாம் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். 

62 தடுப்பணைகள்...

அதுமட்டுமல்லாமல், பெய்கின்ற மழைநீர் ஓடைகள், நதிகள் வழியாக கடலில் வீணாக கலக்கின்ற நீரை ஆங்காங்கே தடுத்து நிறுத்தி, நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும் என்பதற்காக மூன்றாண்டு கால திட்டமாக 1000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து, இந்த ஆண்டு 62 தடுப்பணைகள் கட்டுவதற்கு அம்மாவினுடைய அரசால் 292 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.  ஆகவே, இப்படி எல்லா மாவட்டங்களிலும் எங்கெங்கெல்லாம் தடுப்பணை கட்ட வேண்டுமோ, அங்கெல்லாம் தடுப்பணை கட்டுவதற்கு உரிய நடவடிக்கை அம்மாவினுடைய அரசு எடுத்து வருகிறது.

தலையாட்டுவது கிடையாது...

கேள்வி:  நீங்கள் மத்திய அரசு சொல்வதை மட்டும்தான் செய்கிறீர்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் வருகின்றது, அது பற்றி...
பதில்: எதிர்க்கட்சி எப்படி வேண்டுமானாலும் பேசலாம், எதிர்க்கட்சி அப்படித்தான் பேசுவார்கள், எங்களை பாராட்டியா பேசப் போகிறார்கள்?கிடையாது. அம்மா எப்படி பின்பற்றினார்களோ, அதே போல அம்மாவினுடைய அரசும் பின்பற்றுகிறது. எதை எதிர்க்குமோ, அதை எதிர்த்தோம்.  எல்லாவற்றிற்கும் நாங்கள் தலையாட்டுவது கிடையாது. கடந்த காலம் திராவிட முன்னேற்றக் கழகம் 14 ஆண்டு காலம் மத்தியிலே ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள், என்ன திட்டம் கொண்டு வந்தார்கள்? காவிரி நதிநீர் பிரச்சினையைக்கூட அவர்களால் தீர்க்க முடியவில்லை.

நிறைவேற்றவில்லை...

2007-ல் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்தது,  மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தார்கள்.  திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர், அவருடைய மகன், பேரன் எல்லோரும் மத்தியில் மந்திரியாக இருந்தார்கள், நினைத்திருந்தால் நிச்சயம் செய்திருக்கலாம். நடுவர் மன்ற தீர்ப்பு 2007-ல் வந்து, இரண்டுமாத காலம் கிடப்பில் போட்ட காரணத்தினால், அதனை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. அம்மா சட்டப் போராட்டம் நடத்தித் தான் உச்சநீதிமன்றத்தின் மூலமாக, இன்றைக்கு அம்மாவினுடைய அரசு, விவசாயிகளினுடைய உரிமையை பெற்றுத் தந்திருக்கின்றது. நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீரை அம்மாவினுடைய அரசுதான் பெற்றுத் தந்திருக்கின்றது.  ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகம் கடுகளவும் இதில் ஈடுபடவில்லை, அதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

சிந்திக்கவில்லை...

இவர்கள் நினைத்திருந்தால் 2007-லேயே இந்த காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்துக் குழு, இரண்டையும் அமைத்திருந்தால், அன்றைக்கு ஒதுக்கப்பட்ட நீர் கிடைத்திருக்கும். நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 192 டி.எம்.சி. கிடைத்திருக்கும். அதை சரியான முறையில் அணுகாத காரணத்தினால், அதில் சரியான அக்கறை காட்டாத காரணத்தினால், பதவி ஒன்றுதான் வேண்டும், மத்தியில் ஆட்சி அதிகாரம்தான் வேண்டும் என்று நினைத்தார்களே தவிர, தமிழ்நாட்டு மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை, அதற்கான முயற்சி எடுக்கவில்லை. 

பெற்று விட்டோம்...

நாம் அம்மாவினுடைய அரசு வழக்கு மன்றத்திற்கு சென்று, நீதிமன்றத்திற்கு சென்று, அம்மா  சட்டத்தின் வாயிலாக இன்றைக்கு இன்றைக்கு விவசாயிகளின் உரிமையை பெற்றுத் தந்திருக்கிறது. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதற்கென்று காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.  ஒவ்வொரு முறையும் அந்தக் குழு கூடி ஒவ்வொரு மாநிலத்திற்கும், அந்தந்த மாநிலத்தில் பெய்கின்ற மழைநீரை கணக்கிட்டு, அதற்குத் தக்கவாறு, நமக்கு வழங்க வேண்டிய நீர் உச்சநீதிமன்றம் அறிவித்தபடி வழங்கப்படும், அதற்குண்டான கூட்டமும் நடைபெற்று முடிந்து விட்டது. அதற்கான நீரையும் நாம் இரண்டு மாதத்தில் பெற்று விட்டோம்.

நீர் கொடுக்கப்படும்...

அரசாங்கத்தைப் பொறுத்தவரைக்கும், ஏற்கனவே வெட்டப்பட்ட கால்வாய் எந்த அளவுக்கு தண்ணீர் பிடிக்குமோ, அந்த அளவுக்கு நாங்கள் தண்ணீரை திறந்து விடுகிறோம். கடைமடை பகுதியில் வாய்க்காலுக்கு முன்னால் இருக்கின்ற ஏரி, குளங்களை நிரப்புவதற்காக தண்ணீரை திறந்து விட்டிருக்கிறார்கள், ஏரி, குளங்கள் நிரம்பிக் கொண்டிருக்கிறது.  நிரம்புகின்ற பொழுது, படிப்படையாக கடைமடை பகுதி முழுவதும் தேவையான நீர் கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து