ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் கலெக்டர் வீர ராகவ ராவ் திடீர் ஆய்வு

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      ராமநாதபுரம்
rmd pro news

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் வீரராகவராவ் திடீர் ஆய்வு செய்து அறிவரைகள் வழங்கினார்.
      ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலப்பணிகள் குறித்து கலெக்டர் வீரராகவராவ் நேரில் சென்று கள ஆய்வு செய்தார். ராமநாதபுரம் நகராட்சியானது 33 வார்டுகளைக் கொண்டதாகும். நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, பாதாள சாக்கடை திட்டம், சாலை வசதி, தெருவிளக்கு வசதி உட்பட அனைத்து விதமான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.  அதேபோல பிறப்புச் சான்றிதழ், இறப்பு சான்றிதழ் போன்ற அடிப்படை சான்றிதழ் வழங்குதல், நகர்ப்பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொண்டு சுகாதார பாதுகாப்பினை உறுதி செய்தல், தண்ணீர் வரி, வீட்டு வரி போன்ற பல்வேறு விதமான வரிவசூல் செய்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் கலெக்டர் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று நகராட்சி அலுவலக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.  குறிப்பாக நகராட்சி அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்து, நிலுவையில் உள்ள நபர்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்து, நிலுவையில் உள்ள நபர்களுக்கு உடனடியாக சம்பந்தப்பட்ட சான்றிதழ்களை வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் நகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் அளவு, நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வரும்  குடிநீர் அளவு, திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடுகள் ஆகியவை குறித்து அலுவலர்களிடத்தில் கேட்டறிந்தார். மேலும் சுற்றுப்புற தூய்மையில் நகராட்சி அலுவலக வளாகமானது ஒட்டுமொத்த நகரத்திற்கும், பொதுமக்களுக்கும் முன்னோடியாக திகழ வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். 
 அதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட சிதம்பரம்பிள்ளை ஊரணியில் ஆய்வு செய்து,  ஊரணி கரைகளைச் சுற்றி அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்திடவும், ஊரணிக்கு தண்ணீர் வருவதற்கான வரத்துக்கால்வாய் சரியான முறையில் சீரமைக்கப்பட்டு உள்ளதை உறுதி செய்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதன்பின்பு, அண்ணா நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் திடக்கழிவு மேலாண்மை பூங்காவின் செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து, அலுவலர்களிடத்தில் கேட்டறிந்தார். நகராட்சி பகுதியில் மட்டும் தினந்தோறும் சுமார் 28 டன் அளவில் கழிவுகள் சேகரிக்கப்படுவதாகவும், குப்பை மற்றும் கழிவுப்பொருட்களைச் சேகரிப்பதற்கு ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தின் கீழ் 83 மூன்று சக்கர ரிக்ஷாக்கள், 2 டிப்பர் லாரிகள் செயல்பட்டு வருவதாகவும், குப்பை மற்றும் கழிவுகள் அனைத்தும் முறையாக சேகரிக்கப்பட்டு சரியான முறையில் அப்புறப்படுத்துவதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
 தொடர்ந்து, காந்திநகர் பகுதிக்கு மாவட்ட கலெக்டர் நேரடியாகச் சென்று குடிநீர் விநியோகம் குறித்து பொதுமக்களிடத்தில் நேரடியாக கேட்டறிந்தார்.  மேலும் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் நல மையத்தின் அருகே தண்ணீர் தேங்கி கழிவுநீர் போன்று தோற்றமளித்த சூழ்நிலையினை கண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அதனை உடனடியாக சரிசெய்திடும் வகையில் சிறிய அளவிலான கழிவுநீர் தொட்டி அமைத்து மூடியிட்டு பராமரித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  அதனைத்தொடர்ந்து, ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்திற்கு நேரடியாக வருகை தந்த மாவட்ட கலெக்டர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கட்டிட கழிப்பறையின் பயன்பாடு மற்றும் பராமரிப்புகள் குறித்து ஆய்வு செய்தார்.  கழிப்பறை செல்வதற்கு பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து கேட்டறிந்தார்.  நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுவதை அவ்வப்போது திடீர் ஆய்வு செய்து உறுதி செய்திட நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.  மேலும் பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் கடைகளைச் சார்ந்த விற்பனையாளர்கள் மற்றும் உரிமையாளர்களிடத்தில் சுற்றுப்புறத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும் என  அறிவுறுத்தினார்.  இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் எஸ்.பார்த்தசாரதி, உதவிப்பொறியாளர் சுப்பிரமணிய பாபு உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து