கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் என்.டி.ஆர். மகன் ஹரிகிருஷ்ணா பலி

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      இந்தியா
NTR Son kill 2018 8 29

ஐதராபாத் : என்.டி.ராமாராவின் மகனும், தெலுங்குதேச கட்சியின் மூத்த தலைவருமான ஹரிகிருஷ்ணா சென்ற கார் விபத்துக்குள்ளானது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த நடிகர் என்.டி ராமாராவின் 4-வது மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா. இவரது மகன், தெலுங்கு திரையுலகின் தற்போதைய முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர். நல்கொண்டா மாவட்டத்தில் நேற்று அதிகாலை காரில் சென்ற போது விபத்துக்குள்ளானதில் ஹரிகிருஷ்ணா உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் நேற்று காலை 9:00 மணியளவில் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்ளவதற்காக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஹரிகிருஷ்ணா டெயோட்டோ பார்ச்சூனர் காரில் வந்தார். காரை அவரே ஓட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி - அடங்கினி நெடுஞ்சாலையில் நேற்று காலை 6:00 மணியளவில் கார் சென்று கொண்டிருந்தபோது, மிக அதிகமான வேகத்தில் சென்றதால் கட்டுப்பாட்டை இழந்தது. நெடுஞ்சாலையின் தடுப்பில் பயங்கரமாக மோதிய கார் அந்த வேகத்தில் தூக்கி வீசப்பட்டது. பல முறை உருண்ட கார், மற்றொரு மாருதி கார் மீது பலத்த வேகத்தில் மோதியது.

உருண்டு விழந்த காரில் இருந்த ஹரிகிருஷ்ணாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மார்பிலும் காயங்கள் ஏற்பட்டன. அவரது தலையில் அடிப்பட்ட நிலையில் அவர் உடனடியாக அவர் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கடந்த 1956-ம் ஆண்டு பிறந்த ஹரிகிருஷ்ணா சிறு வயதிலேயே, குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்தில் அறிமுகமானார். 1970-ம் ஆண்டு என்.டி ராமாராவுடன் இணைந்து நடித்தார். அது போலவே என்.ஆர் தெலுங்குதேசம் கட்சியை தொடங்கி அரசியல் பிரவேசம் செய்தபோது அவருடன் பயணித்த ஹரி கிருஷ்ணா, பின்னர் 1998-ம் ஆண்டு மீண்டும் சினிமாவில் கால் பதித்த ஹரிகிருஷ்ணா தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யான ஹரிகிருஷ்ணா, தற்போது அக்கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக உள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஹரிகிருஷ்ணாவின் மைத்துனவர் ஆவார். ஹரிகிருஷ்ணா மறைவுக்கு சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து