முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் குளறுபடி: கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட இயலாது சுப்ரீம் கோர்ட் மறுப்பு

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மருத்துவ படிப்புக்காக நடைபெற்ற நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடியின் காரணமாக மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட இயலாது என்று சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

மனு தாக்கல்

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தவறான மொழிபெயர்ப்புடன் கேட்கப்பட்டிருந்த 49 கேள்விகளுக்கும் கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஐகோர்ட் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஐகோர்ட் கிளை...

இந்த வழக்கில் ஐகோர்ட் மதுரைக் கிளை கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மொழி மாற்றத்தில் தவறு நிகழ்ந்த 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் ஒவ்வொருவருக்கும் 196 மதிப்பெண் வழங்க வேண்டும். இந்த மதிப்பெண் அடிப்படையில் இரு வாரங்களுக்குள் புதிய தரவரிசைப் பட்டியலை சி.பி.எஸ்.இ. வெளியிட வேண்டும். அதுவரை தற்போதைய தர வரிசைப் பட்டியலையும், கலந்தாய்வையும் நிறுத்தி வைக்க வேண்டும். புதிய தர வரிசைப் பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு மூலமாக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தது.

மேல்முறையீடு...

இந்த வழக்கு தொடர்பாக டி.கே. ரங்கராஜன் எம்.பி. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த நாளே கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நீட் மூலம் எம்.பி.பி.எஸ் இடத்திற்கு தேர்வாகியுள்ள தமிழக மாணவர் சத்யா என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, ஐகோர்ட்மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

கருணை மதிப்பெண்...

இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எல். நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஜூலை 20-ம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் டி.கே. ரங்கராஜன் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லூத்ரா, என்ஜிஆர் பிரசாத் ஆகியோர் ஆஜராகினர். மொழிபெயர்ப்பு காரணமாக தவறாகக் கேட்கப்பட்டிருந்த 49 கேள்விகளால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. எனவே, இந்தக் கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்.

மாணவர்கள் நிலை...

அப்போது குறுக்கிட்ட நீதிபதி எல். நாகேஸ்வர ராவ், நீட் தேர்வு என்பது அகில இந்திய அளவில் நடத்தப்படுவதாகும். வினாத்தாளின் மொழிப்பெயர்ப்பு சரியாக இருந்திருக்கும் பட்சத்திலும், மாணவர்கள் தவறான விடையை அளித்திருக்கக்கூடும் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண் அளிக்கப்பட்டால் திறமையான மாணவர்கள் நிலை என்னவாகும்?' என்றார்.

பாகுபாடு உருவாகும்...

இதற்கு சி.பி.எஸ்.இ. தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணீந்தர் சிங், மாநில அரசால் அளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் செய்த தவறுக்கு சி.பி.எஸ்.இ. மீது குற்றம்சாட்டி வருகின்றனர். நீட் தேர்வை வெளிப்படைத் தன்மையுடன் நடத்தும் வகையில், வினாத்தாள் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் வடிவமைக்கப்பட்டிருந்தது. வினாத்தாளில் குழப்பம் ஏற்படும் பட்சத்தில் ஆங்கில மொழியில் கேட்கப்பட்ட வினாக்களையே இறுதியாகக் கொள்ள வேண்டும். 196 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டால் சில மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களையும் விஞ்சும் நிலை ஏற்படும். மேலும், மாணவர்கள் மத்தியில் பாகுபாடு உருவாகவும் வழிவகுக்கும். குழப்பமான நிலை உருவாகும் என்றார்.

தடைவிதித்து....

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கப்படுகிறது. நீட் தேர்வு வினாத்தாள் மொழிபெயர்ப்பில் எதிர்காலத்தில் தவறு நேராத வகையில் இருப்பதற்கான தீர்வுகளை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மனுதாரர்கள் மேற்கொள்ள வேண்டும். வழக்கு 2 வாரங்களுக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்து வழக்கினை ஒத்தி வைத்தனர்.

ஆங்கிலத்தில் தேர்ச்சி...

இந்த வழக்கின் போது நேற்று நடந்த விசாரணையில் சி.பி.எஸ்.இ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவர்கள் தங்களது மாநில மொழியில் படிப்பது என்பது சரி, ஆனால் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்பதும் முக்கியம். பிளஸ் 2 மாணவர்கள் அடிப்படை ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதும் முக்கியம். மருத்துவ படிப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் பயிற்றுவிக்கப் படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
வாய்ப்பு கிடையாது...

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு பின்னர் நீதிமன்றம் தெரிவித்ததாவது:-

நீட் தேர்வு வினாத்தாள் குளறுபடியின் காரணமாக மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட இயலாது. தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு இம்முறை நிவாரணம் எதுவும் அளிக்க வாய்ப்பு கிடையாது. நீட் தேர்வுக்கும், மருத்துவப் படிப்புக்கும் ஆங்கிலம்தான் மிகவும் முக்கியம் என்னும் பட்சத்தில், மாணவர்களுக்கு மாநில மொழியில் தேர்வு நடத்துவது எதனால்? இவற்றை சரி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள் வழக்கினை செப்டம்பர் 26-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து