எத்தனை தி.மு.க. வந்தாலும் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது - முதல்வர் எடப்பாடி ஆவேச பேட்டி

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      தமிழகம்
edappadi palanisamy 30-08-2018

சேலம் : எத்தனை திராவிட முன்னேற்றக் கழகம் வந்தாலும் இந்தக் கட்சியையும் உடைக்க முடியாது, இந்த ஆட்சியையும் கவிழ்க்க முடியாது. அவர்களுடைய எண்ணம் ஒரு பொழுதும் நிறைவேறாது. பிரச்சினை ஏற்படும் போது அதை வைத்து அரசியல் செய்பவர்கள் நாங்கள் அல்ல என்றும், அது தி.மு.க.வுக்குத்தான் கைவந்த கலை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

சேலம் மாவட்டம், எடப்பாடியில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை இங்கே பார்ப்போம்.

கேள்வி: முக்கொம்பு முழுமையாக உடையக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறதென்கிறார்களே?
பதில்: தவறான கருத்து, ஒரு பகுதி உடைந்திருக்கிறது. அந்தப் பகுதியை சரிசெய்வதற்காக நம்முடைய தலைமைப் பொறியாளர் மற்றும் பொதுப்பணித் துறையைச் சேர்ந்த செயலாளர்கள் அங்கேயே முகாமிட்டு அந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றார்கள். இன்னும் 2, 3 தினங்களுக்குள் அந்தப் பணி நிறைவு பெற்றுவிடும்.
கேள்வி: அரசு பொறுப்பேற்றதிலிருந்து எவ்வளவு திட்டங்கள் இதுவரை தமிழகம் முழுவதும் எவ்வளவு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது?
பதில்: அம்மாவினுடைய அரசு பதவி ஏற்றது முதல் இன்று வரை ரூபாய் 22,640 கோடியே 29 லட்சம் மதிப்பிலான 41,887 முடிந்தப் பணிகளை துவக்கி வைத்தும், ரூபாய் 19,101 கோடியே 84 லட்சம் மதிப்பிலான 7,597 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். மொத்தத்தில் இன்று வரை ரூபாய் 41,742 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டிலான 49,484 பணிகள் நடைபெற்று வருகின்றன.
கேள்வி: அ.தி.மு.க. தரப்பில் பிரச்சினை வந்த பொழுது தி.மு.க. சார்பில் கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. இப்பொழுது தி.மு.க.-விலும் பிரச்சினை இருந்து கொண்டிருக்கிறது. அதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?
பதில்: அது உட்கட்சிப் பிரச்சினை. எங்களைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் ஜனநாயக முறைப்படி செயல்பட வேண்டுமென்று நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் அடுத்தவர்களைப் பற்றி எப்பொழுதும் பேசுவதில்லை. பிரச்சினை ஏற்படும்பொழுது அதை வைத்து அரசியல் செய்பவர்களும் நாங்கள் அல்ல. இதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கைவந்த கலை. சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது என்னவெல்லாம் செய்யவேண்டுமென்று நினைக்கின்றார்களோ அதையெல்லாம் செய்வார்கள்.

இருந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரைக்கும், பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இயக்கம். திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல, இதுபோல் எத்தனை திராவிட முன்னேற்றக் கழகம் வந்தாலும் இந்தக் கட்சியையும் உடைக்க முடியாது, இந்த ஆட்சியையும் கவிழ்க்க முடியாது. அவர்களுடைய எண்ணம் ஒரு பொழுதும் நிறைவேறாது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து