இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இடையே தொலைபேசி வசதி: சீனா

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      உலகம்
chenesh flag 31-08-2018

பெய்ஜிங்,இரு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சகங்கள், இரு தரப்பு ராணுவங்களின் பிராந்திய பிரிவுகள் இடையே தொலைபேசி தொடர்பை ஏற்படுத்துவது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வீ பெங்கி டெல்லி வந்திருந்தார். சீன அமைச்சரின் இந்தப் பயணத்தின்போது பாதுகாப்பு விவகாரம் தொடர்பான தொடர்புகளுக்காக தொலைபேசி இணைப்பு அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன பாதுகாப்புத் துறை செய்தித்தொடர்பாளர் வூ குயான், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

டிராகனும் (சீனா), யானையும் (இந்தியா) இணைந்து நடனமாடினால், அவர்கள் இருவருக்கும் அது பலன் அளிப்பதுடன், ஆசியாவை தொடர்ந்து வளமான நிலையில் வைத்திருக்கவும் உதவிகரமாக அமையும். ஆனால், அவர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு, சண்டையிட்டுக் கொண்டிருந்தால் இருவருக்குமே பலன் கிடைக்காது. மற்றவர்கள் மட்டுமே பலன் அடைவார்கள்.

இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பையும், தொடர்புகளையும் மேம்படுத்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட கருத்தொற்றுமையை வெற்றிகரமாக அமலுக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், அதுதொடர்பாக இந்தியாவுடன் ஆவலுடன் பணியாற்றி வருகிறோம்.

இதற்காக, பாதுகாப்பு அமைச்சகங்கள் இடையே, நம்பிக்கைக்குரிய வகையிலான நேரடி தொலைபேசி வசதியை ஏற்படுத்துவது குறித்து விவாதம் நடைபெற்றது. எல்லைப் பிரச்னைகள் தொடர்பாக, தொடர்புடைய ராணுவ தளபதிகளுக்கு இடையே அவசர தொலைபேசி இணைப்பை அமைப்பது தொடர்பாகவும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது என்று வூ குயான் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து