வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Chennai Meteorological Center2018-08-05

சென்னை,தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கன மழை பெய்துள்ளது.

அதிகப்பட்சமாக சிதம்பரம், விழுப்புரம் 9 செ.மீ.மழை பெய்துள்ளது. திருச்சுழி 5 செ.மீ, மயிலாடுதுறை, ஏற்காடு, சென்னை மாதவரம், உளுந்தூர்ப்பேட்டை, சீர்காழி, திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் 4 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். வட தமிழகத்தில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு முறை மிதமான மழை பெய்யக்கூடும். தென்மேற்கு பருவமழை மூன்றாம் கட்டம் நிறைவுற்ற நிலையில் கடந்த ஜூன் முதல் ஆகஸ்டு 31 வரை தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு 179 மி.மீட்டர். இந்த காலத்தின் இயல்பான அளவு 204 மி.மீட்டர்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், நெல்லை, கோவை மாவட்டங்களில் இயல்பைவிட அதிக அளவில் மழை பெய்துள்ளது. வடமேற்கு மாவட்டங்களான கிருஷ்ணகிரியில் 69 சதவிகிதமும், தர்மபுரியில் 64 சதவிகிதமும், பெரம்பலூரில் 56 சதவிகிதமும் குறைவாக மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து