பண மதிப்பிழப்பு நடவடிக்கை திட்டமிட்ட ஊழல்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      இந்தியா
ragul2018-08-25

புதுடெல்லி,பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு உதவும் நோக்கத்திலேயே, உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2016, நவம்பர் 8-ஆம் தேதி, உயர் மதிப்புடைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து, வங்கிகள் மூலமாக பழைய நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு, ரூ.500, ரூ.2,000 ஆகிய புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்பட்டன.இந்த அறிவிப்பை வெளியிட்டபோது, நாடெங்கிலும் ரூ.15.41 லட்சம் கோடி பணம் புழக்கத்தில் இருந்தது. இதில், ரூ.3 லட்சம் கோடி அளவுக்கான கருப்புப் பணம், திரும்பி வராது என மத்திய அரசு கருதியிருந்தது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ.15.31 லட்சம் கோடி பணம் திரும்பி வந்துவிட்டதாகவும், இது மொத்த தொகையில் 99.3 சதவீதம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலமாக, வங்கிகளுக்கு வராமல் போன தொகை ரூ.10,720 கோடி மட்டுமே என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது:

பிரதமர் மோடி தன்னுடைய நெருங்கிய தொழிலதிபர்களான 15 முதல் 20 நபர்களுக்கு உதவும் விதமாகவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். இந்த நடவடிக்கையின்போது பிரதமரின் நண்பர்கள் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றி விட்டனர். பணமதிப்பிழப்பு என்பது மாபெரும் ஊழலே தவிர வேறல்ல. அதற்கான ஆதாரங்கள் மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கின்றன. பணமதிப்பிழப்பு என்பது தற்செயலான தவறு அல்ல. அது திட்டமிடப்பட்ட திணிப்பாகும்.கடந்த 70 ஆண்டுகளில் எவராலும் செய்ய முடியாததை தமது அரசு செய்து முடித்துள்ளதாக பிரதமர் மோடி கூறுவது சரிதான். அதை ஏன் செய்தார் என்பதை அவர் விளக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து