மதுரை மேலூர் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      மதுரை
melur news

மேலூர், - மதுரை மேலூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பூட்டை உடைத்து புகுந்த கொள்ளையர்களால் லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.3.5 கோடி மதிப்பிலான நகை-பணம் தப்பியது.
உடைக்கப்பட்டது...
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தெற்கு தெரு கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. மேலூர்-மதுரை 4 வழிச்சாலையில் இயங்கி வரும் இந்த சங்கத்தில் விவசாயிகள் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று வருகிறார்கள். இதனால் லாக்கரில் எப்போதும் அடகு நகைகள் மற்றும் பணம் அதிகளவில் இருக்கும். இங்கு இரவு காவலாளியாக ஆறுமுகம் பணியாற்றி வந்தார். அவர் நேற்று அதிகாலை ரோந்து வந்தபோது வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது சி.சி.டி.வி. கேமிரா, அலாரம் கருவி போன்றவையும் உடைக்கப்பட்டு இருந்தன.
போலீசில் புகார்
மேலும் நகைகள்-பணம் வைத்திருந்த லாக்கர் அறையும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. லாக்கர் முன்பு வெல்டிங் சாதனங்களும் கிடந்தன. இதனால் கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து கூட்டுறவு சங்கச் செயலாளர் பால்சாமிக்கு தகவல் தெரிவித்தார். அவர், மேலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சக்கரவர்த்தி, இன்ஸ்பெக்டர் யேசு மற்றும் போலீசார் கூட்டுறவு கடன் சங்கம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.கொள்ளையர்கள் திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் இறங்கி உள்ளனர்.
திட்டமிட்டே...
சம்பவ இடத்தில் மினி வேன் நின்று சென்றதற்கான அடையாளம் காணப்பட்டது. மேலும் லாக்கர் அறை முன்பு கியாஸ் வெல்டிங் சாதனங்களும் கிடந்ததால், அவர்கள் அதனை வேனில் கொண்டு வந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். வங்கியில் சி.சி.டி.வி. கேமிரா இருப்பதை அறிந்து அதனை முதலில் உடைத்துள்ளனர். இதே போல் அலாரம் ஒலிக்கும் கருவியையும் சேதப்படுத்தி உள்ளனர். எனவே அவர்கள் திட்டமிட்டே இந்த சம்பவத்தில் இறங்கி உள்ளனர் என போலீசார் கருதுகின்றனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் பொற்கை வரவழைக்கப்பட்டது. அது வங்கியில் மோப்பம் பிடித்து விட்டு அங்கும் இங்குமாக ஓடி சிறிது தூரத்தில் நின்றது.தடயவியல் நிபுணர்கள் கூட்டுறவு கடன் சங்கம் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.
நகை-பணம் தப்பியது...
சம்பவம் நடந்த வங்கி, ஊருக்கு சற்று ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ளது. எனவே கொள்ளையர்கள் நிதானமாக செயல்பட்டுள்ளனர். வங்கியின் அலாரம், சி.சி.டி.வி. கேமிரா மற்றும் முன்பக்க கதவு பூட்டு போன்றவற்றை உடைத்த அவர்களால், லாக்கரை உடைக்க முடியவில்லை. அதற்குள் விடிந்து விட்டதாலோ, ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டதாலோ கொள்ளையர்கள் தப்பிச் சென்று விட்டனர். இதனால் லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பிலான அடகு நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் தப்பியது.
கொள்ளையர்கள் புகுந்தபோது காவலாளி ஆறுமுகம் அங்கு இல்லை என தெரிகிறது. அவர் எங்கு சென்றார்? காலையில் ஏன் வந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து