கேரளாவை உலுக்கும் எலிக்காய்ச்சல்: 5 நாளில் 23 பேர் பலியான பரிதாபம்

சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2018      இந்தியா
keralaa 01-09-2018

திருவனந்தபுரம், வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வரும் கேரளாவில் தற்போது எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எலிக்காய்ச்சலால் 5 நாட்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் அண்மையில் பெய்த வரலாறு காணாத மழையினால், அம்மாநிலம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை, வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

பல ஆயிரம் கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்திருக்கின்றன. 200-க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்துள்ளன. இதுதவிர, கன மழைக்கு அம்மாநிலத்தில் 476 பேர் பலியாகியுள்ளனர். நிவாரண முகாம்களில் சுமார் 9 லட்சம் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அங்கு தற்போது தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம், திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு என பல மாவட்டங்களிலும் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கோட்டயம் மாவட்டம் கடநாடு பகுதியைச் சேர்ந்த பி.வி. ஜார்ஜ் (வயது 62) என்பவர் எலிக் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதை தொடர்ந்து அடுத்தடுத்து பலர் இறந்துள்ளனர்.

கோழிக்கோடு அருகே கரத்தூர் பகுதியில் கிருஷ்ணன், சிவதாசன் ஆகிய இருவர் நேற்று காலை உயிரிழந்தனர். எலிக்காய்ச்சலில் கடந்த 5 நாட்களில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளதாக கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் எலிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் 150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே எலிக்காய்ச்சல் தொடர்பாக கேரள மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘கோழிக்கோடு, பாலக்காடு, வயநாடு, திருச்சூர், திருவனந்தபுரம் மாவட்டங்களில் அடுத்தடுத்து எலிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். பல நாட்களாக தேங்கியுள்ள தண்ணீரில் விலங்குகள் செத்து மிதப்பதால் எலிக்காய்ச்சல் போன்ற தொற்றுகள் ஏற்படுகின்றன.

தண்ணீர் மூலமே எலிக்காய்ச்சல் தொற்று பரவுகிறது. எனவே மக்கள் உஷாராக இருக்க வேண்டும். சுட வைத்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து