விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மகன் வேண்டுகோள்

சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2018      தமிழகம்
vijayakanth 01-09-2018

சென்னை,தே.மு.தி.க. பொதுச் செயலர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவரது மகன் விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து சமூக தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவின.

இந்த நிலையில் விஜயகாந்த் உடல் நிலை பற்றி வரும் தகவல்கள் குறித்து அவரது மகன் விடியோ மூலம் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் பரவுகின்றன. ஆனால் அதில் உண்மையில்லை. அவர் நன்றாக உள்ளார். அவர் மருத்துவமனையில் ராஜா போல இருக்கிறார். அவர் உண்மையிலேயே கவலைக்கிடமாக இருந்தால் நான் அங்குதான் இருந்திருக்க வேண்டும். ஒரு வேலை விஷயமாக நான் நெல்லூர் வந்துள்ளேன்.

தேவையில்லாமல் தவறான தகவல்களை பரப்புவதால் உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்? அவருக்கு உடல் நலமில்லாமல் இருப்பது உண்மைதான். ஆனால் படுத்த படுக்கையாக இருப்பது போல செய்தி பரப்புவது வேதனை அளிக்கிறது.

இதுபோன்ற தேவையற்றபேச்சுக்களால் நானும் எனது குடும்பத்தாரும் மன வேதனை அடைகிறோம். அவர் குணமடைந்து வருவார். அவருக்கு ஒன்றும் ஆகாது. எனவே தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.
ஒவ்வொருவருக்கும் என வேலை, கடமை இருக்கிறது. அதைப் பாருங்கள். அவர் நிச்சயம் திரும்ப வருவார் என்று பேசியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து