எதிர்க்கட்சியினரின் அத்துமீறலை தடுக்க வாக்காளர் சேர்த்தல் - நீக்கல் பணிகளை தீவிரப்படுத்துங்கள் அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். வேண்டுகோள்

சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2018      தமிழகம்
cm 2 01-09-2018

சென்னை,எதிர்க்கட்சியினரின் போலி வாக்காளர் சேர்ப்பை தடுக்க வாக்காளர் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
 

சரிபார்க்க அவகாசம்...1.1.2019-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை சுருக்க முறையில் திருத்தம் செய்வதற்கான பணிகள் பின்வரும் கால அட்டவணைப்படி நடைபெற உள்ளன. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு ஜனவரி 4-ம் தேதி, சனிக் கிழமை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கல் / திருத்தல்கள் மற்றும் இடம் மாற்றுதலுக்கான மனு அளிக்கக் கால அவகாசம் அடுத்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் அக்டோபர் 31- ம் தேதி வரைவாக்காளர் பட்டியலை கிராம சபை, உள்ளாட்சி மன்றம் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களில், வாக்காளர் பட்டியலின் தொடர்புடைய பாகம் படிக்கப்பட்டு, பெயர்களை சரிபார்த்தலுக்கான அவகாசம் வரும் 8 மற்றும் 22 தேதிகளிலும் அக்டோபர் 6 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 9 மற்றும் 23-ம் தேதிகளிலும் அக்டோபர் 7 மற்றும் 14 ஆகிய தேதிகளிலும் வாக்காளர்கள் சேர்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் ஜனவரி 4-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிக் கவனம் செலுத்தி...மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், ஒன்றியம் / நகரம் / பேரூராட்சி / பகுதி / ஊராட்சி / கிளை / வார்டு மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும், கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், குறிப்பாக, கழகத்தின் சார்பில் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கென்று நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை முகவர்களும் தனிக் கவனம் செலுத்தி, 18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாதவர்களின் பெயர்களையும், புதிதாக குடிவந்துள்ளவர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கும், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை சீர் செய்வதற்கும்தேவையான படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து அதனை சம்பந்தப்பட்ட முகாம்களில் வழங்கி இப்பணியை முழுமையாகச் செய்து முடித்திட வேண்டும்.

நடவடிக்கை எடுக்க...மேலும், வாக்காளர் பட்டியல்களை சுருக்க முறையில் திருத்தம் செய்வதற்காக நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்கள், உள்ளாட்சி மன்றம் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களிலும், சிறப்பு முகாம்களிலும், கழகத்தின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்று, எதிர்க்கட்சியினர் போலி வாக்காளர்களை பதிவு செய்யாமல் இருந்திடும் வகையில் தடுத்து நிறுத்துவதோடு; நேர்மையான, நியாயமான வாக்காளர் பட்டியல் இறுதி வடிவம் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதே போல், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளில் எதிர்க்கட்சியினரின் அத்துமீறல்கள் இருப்பதாகத் தெரிய வந்தால், உடனுக்குடன் அது தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து உரிய தீர்வு காண வேண்டும்.
 

முகவர்களை நியமித்து...அ.தி.மு.க. சார்பில், வாக்குச் சாவடி நிலை முகவர்கள் நியமிக்கப்படாத வாக்குச் சாவடிகளில், வாக்குச் சாவடி நிலை முகவர்களை உடனடியாக நியமித்து, அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தம் சம்பந்தமாகத் தாங்கள் மேற்கொண்ட பணிகளின் விபரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மூலம் தலைமைக் கழகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Agni Devi review | Bobby Simha | Madhoo | Ramya Nambeesan | Sathish

Embiran Movie Review | Rejith Menon | Radhika Preeti | Krishna Pandi

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து