தேவைக்கு அதிகமாக உள்ள சொகுசு வாகனங்களை ஏலம் விட பாகிஸ்தான் அரசு முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2018      உலகம்
pakisthan 02-09-2018

இஸ்லாமாபாத்,பாகிஸ்தானின் பிரதமர் அலுவலகத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள சொகுசு வாகனங்களை ஏலத்துக்கு விட, அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.அந்த நாட்டில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு மேற்கொண்டு வரும் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் தி டாண் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:-

இஸ்லாமாபாதில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், தேவைக்கு அதிகமாக உள்ள சொகுசு வாகனங்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் 17-ம் தேதி இதற்காக ஏலம் விடப்படவுள்ளது. அந்த ஏலத்தில் இடம் பெறவிருக்கும் வாகனங்களுக்கான பட்டியலும் தயாராகிவிட்டது.

அதன்படி, 8 பி.எம்.டபிள்.யூ சொகுசுக் கார்கள், 5000 சி.சி. கொண்ட 3 ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு வாகனங்கள், 3000 சி.சி. கொண்ட 2 வாகனங்கள் இடம் பெற்றுள்ளன. 2016-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட 4 மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசுக் கார்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் இரு கார்கள் குண்டு துளைக்க முடியாதவை ஆகும்.
இதுமட்டுமின்றி, டொயோட்டா நிறுவனத்தின் 16 உயர் வகைக் கார்களும் ஏலத்துக்கு விடப்படவுள்ளன. இத்துடன், குண்டு துளைக்க முடியாத 4 லேண்ட் க்ரூஸர் வாகனங்களும் வரும் 17-ம் தேதி ஏலத்துக்கு வருகின்றன.

ஒரு ஹோண்டா சிவிக் கார், 3 சுஸூகி வாகனங்கள், ஒரு ஹினோ பேருந்து ஆகியவையும் ஏலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து