நான் கருணாநிதியின் மகன்! சொன்னதைச் செய்வேன் என்கிறார் மு.க.அழகிரி

சென்னை : நான் கருணாநிதியின் மகன். சொன்னதை செய்வேன் என்று கூறியிருக்கிறார் மு.க. அழகிரி.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து தன்னை தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்று மு.க. அழகிரி விரும்பினார். ஆனால் ஸ்டாலினோ, கட்சி மேலிடமோ அவரது விருப்பத்தை கண்டுகொள்ளவே இல்லை. இதையடுத்து, தனது பலத்தை நிரூபிக்க வரும் 5-ம் தேதி சென்னையில் அமைதிப் பேரணி நடத்தப்படும் என்று அழகிரி அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். மேலும், தி.மு.க. தலைவர் பொறுப்பை மு.க.ஸ்டாலின் ஏற்றது பற்றிய கேள்விகளையும் தொடர்ந்து அவர் தவிர்த்து வந்தார்.
பின்னர், ஒரு கட்டத்தில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.அழகிரி பேசுகையில்,
நான் கருணாநிதியின் மகன். அதனால் சொன்னதைச் செய்வேன். சென்னையில் நடைபெறும் அமைதிப் பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளார். அவர் சொன்னபடி பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்களா? அல்லது பேரணி பிசுபிசுக்குமா? என்பது வரும் 5-ம் தேதி தெரிந்து விடும்.