அரசு திட்டங்களின் செயல்பாடு குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி ஆய்வு

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      தமிழகம்
EPS 03-09-2018

 சென்னை,முதியோர் ஓய்வூதியம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டங்கள் உள்ளிட்ட அரசு திட்டங்கள் செயல்பாடு பற்றி திண்டுக்கல், கோயம்புத்தூர், விழுப்புரம் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்களுடன் தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று விரிவான ஆலோசனை நடத்தினார்.

திட்டங்கள் குறித்து...இந்த ஆலோசனையின் போது, வேளாண் பெருமக்களுக்கு உரம் மற்றும் விதைகள் விநியோகம் செய்தல், பொது விநியோக திட்டத்தின் மூலம் தங்குதடையின்றி அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல், குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளுதல், ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் முறையான குடிநீர் விநியோகம் செய்தல், தெருவிளக்கு வசதி, சாலை வசதி, கழிப்பறை வசதி, சுகாதார வளாகம் மற்றும் சுற்றுப்புற சுகாதார மேம்பாடு, பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்தல், ஊரக பகுதிகளில் பசுமை வீடுகள் கட்டுதல் குறித்தும் ஆய்வு நடத்தினார்.

விரிவான ஆய்வு...முதியோர் ஓய்வூதிய திட்டம், பட்டா மாறுதல், ஏழை எளியோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, மழைக் காலங்களில் பொதுமக்கள் பாதிப்படையாத வகையில் வெள்ளப் தடுப்பு பணிகள் மேற்கொள்ளுதல், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குதல் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர்களிடம்...முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில், திண்டுக்கல், கோயம்புத்தூர், விழுப்புரம் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள், குடிநீர் திட்டப் பணிகள், குடிமராமத்து திட்டப் பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் சரியான முறையிலும், விரைவாகவும் சென்று அடைகின்றதா என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் டி.ஜி. வினய், மற்றும் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மங்கத் ராம் சர்மா, கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் டி.என். ஹரிஹரன் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்மந்தர் சிங், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் எல். சுப்பிரமணியன் மற்றும் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அதுல்ய மிஸ்ரா, திருப்பூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ். பழனிசாமி மற்றும் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் கே. கோபால் ஆகியோரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன்.எஸ்.பி. வேலுமணி, டாக்டர் வி. சரோஜா, இரா. காமராஜ்,. இரா. துரைக்கண்ணு, ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து