சூழ்ச்சி காரணமாக அம்மாவின் ஆட்சிக்கு சறுக்கல் ஏற்பட்டால் அதை தடுக்கும் முதல் சக்தியாக இருப்பேன்:ஓ.பி.எஸ்.

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      தமிழகம்
o pannerselvam 04-09-2018

 வேலூர், ஜெயலலிதாவின் ஆட்சிக்கு சூழ்ச்சி காரணமாக சறுக்கல் ஏற்பட்டால் அதை தடுக்கும் முதல் சக்தியாக நான் இருப்பேன் என்று வேலூர் பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வேலூரில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். கூட்டத்தில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது.

வழிநடத்திய ஜெயலலிதா:வேலூர் மாவட்டத்தின் பெருமை கூறும் அளவிற்கு இயற்கை கொடைகள் பல உள்ளன. ஆனால் கடல் இல்லை என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். ஆனால் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க.வின் தொண்டர்கள் கடல் அலைபோல திரண்டுள்ளனர். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை புனிதமாக கருதியவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்கு பின்னர் கட்சியை மீட்டெடுத்து இரும்பு கோட்டையாக உருவாக்கியவர் அவர். இந்தியாவிலேயே சிறந்த முதல்-அமைச்சராக திகழ்ந்தவர் ஜெயலலிதா. கட்சி பொறுப்பேற்றவுடன் அவர் பல சோதனைகளை தாங்கி, அவற்றை தகர்த்தெறிந்தார். பல கைக்கூலிகளின் முயற்சிகளை தோற்கடித்தார். அவர் கொண்டு வந்த தொலைநோக்கு திட்டங்கள் ஏராளம். எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சியை வழிநடத்தியவர் ஜெயலலிதா. அவருக்கு பின்னால் அவரது கட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து வருகிறது.

தி.மு.க. எதுவும் செய்யவில்லை:ஜெயலலிதா அரசியல் பயணத்தில் கரடுமுரடான பாதைகளை கடக்க உதவியவர்கள் கட்சியின் தொண்டர்கள் தான். அவர்கள் தான் ஜெயலலிதாவுக்கு பக்க பலமாக இருந்தார்கள். அவரது கட்சியை கைப்பற்ற யாராலும் முடியாது. ஆட்சியில் இருந்த போது காவிரி பிரச்சினையில் வழக்கு தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்தார். முல்லைபெரியாறு அணை விவகாரத்திலும் 142 அடி தண்ணீர் தேக்க வழக்கு தொடர்ந்து சிறப்பான தீர்ப்பை பெற்று தந்தார். ஆனால் இந்த பிரச்சினைகளில் ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை.

3 பிரச்சினைகள்:ஒரு கோடியே 96 லட்சம் பேருக்கு இலவச அரிசி, 4 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வீடுகள் போன்று பல்வேறு திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்து, அவர்களின் மனதில் வாழ்கிறார். அவர் ஆட்சியில் இருந்த போது பள்ளி கல்வித்துறைக்கு வருவாயில் 4-ல் ஒரு பங்கான ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கினார். அவர் வழி நடக்கும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தற்போது ரூ.33 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 48 சதவீத வருவாயை சமூக நலம் சார்ந்த திட்டங்களுக்கு ஒதுக்கியவர் ஜெயலலிதா. அவர் இறக்கும் தருவாயில் இருந்த போது நான் 3 பிரச்சினைகளை எதிர்கொண்டேன். ஒன்று ஜல்லிக்கட்டு, 2-வது வர்தா புயல், 3-வது சென்னை மாநகர குடிநீர் பிரச்சினை. அவை அனைத்தையும் நான் எதிர்கொண்டு வெற்றி பெற்றேன். ஜெயலலிதாவின் உடன் பல ஆண்டுகள் இருந்ததால் இந்த பிரச்சினைகளை என்னால் எதிர்கொள்ள முடிந்தது.

ஒரு கோடி பேரை சேர்ப்போம்:பின்னர் தான் எனக்கு வினை வந்தது. எனக்கெதிராக சதிவேலை நடந்தது. நான் முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை. ஜெயலலிதாவால் 2 முறை முதல்-அமைச்சராகி உள்ளேன். அவர் மறைந்த போது சில சம்பவங்கள் நிகழ்ந்தது. அவை அனைவருக்கும் தெரியும். நான் தர்மயுத்தம் தொடங்கினேன். அந்த தர்மயுத்தம் எதற்கு என்றால் சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என்பது தான் என் நோக்கமாக இருந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்தார்.  நடப்பதோ ஜெயலலிதாவின் ஆட்சி. இந்த ஆட்சி மீண்டும் தி.மு.க.விற்கு சென்று விடக்கூடாது என்று கருதினேன். ஒருவேளை ஆட்சி கவிழ்ந்தால் அதற்கு மூலகாரணமாக நான் இருந்து விடுவேன் என்ற அச்சம். வரலாற்றில் அந்த பழியை சுமக்கக் கூடாது என்று தான் அவருடன் இணைந்தோம். ஒரு கோடியே 50 லட்சத்துக்கு மேல் அ.தி.மு.க.வில் தொண்டர்களை சேர்ப்போம்.

தினகரன் லூசு:சசிகலா குடும்பத்துக்கு ஜெயலலிதா பெயரை கூற கூட அருகதை இல்லை. நான் ஒருமுறை ஜெயலலிதாவிடம் பேசிய போது தினகரனை டி.டி.வி.தினகரன் என்றேன். அவருக்கு கோபம் வந்து விட்டது. அப்போது வெறும் தினகரன் என்று அழைத்தால் போதும் என்றார். ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து துரத்தப்பட்டவர் தான் டி.டி.வி.தினகரன். அவர் தற்போது ஜெயலலிதாவின் பெயரை சொல்லி கட்சி நடத்துகிறார். உடன் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி ஆசை காட்டி வைத்துள்ளார். அவர் பக்கம் உள்ள தொண்டர்கள் உண்மையான தொண்டர்கள் இல்லை. ஜெயலலிதாவின் ஆட்சி நடக்கும் நம் பக்கம் உள்ள தொண்டர்கள் தான் உண்மையான தொண்டர்கள். என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறுகிறார். ஆனால் எப்போதும் சிரிப்பவர்கள் யார்? அவர்தான் லூசு. அதைத்தான் டி.டி.வி. செய்கிறார்.

ஆர்.கே.நகரில் வென்றது போன்று திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெறுவேன் என்கிறார். அவரால் அவரது தொகுதிக்கு கூட தற்போது செல்ல முடியவில்லை. பொதுமக்கள் ரூ.20 நோட்டை காண்பித்து அவரை விரட்டி வருகின்றனர். ஜெயலலிதாவின் ஆட்சிக்கு சூழ்ச்சி காரணமாக சறுக்கல் ஏற்பட்டால் அதை தடுக்கும் முதல் சக்தியாக நான் இருப்பேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

VadaChennai Review | VadaChennai Movie Review | Dhanush | Vetrimaaran | Santhosh Narayanan

Vada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து