முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாது அணை தொடர்பான கர்நாடக அரசின் சாத்தியக்கூறு அறிக்கையை பரிசீலிக்கக் கூடாது - பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : மேகதாது அணையைக் கட்டுவதற்கான கர்நாடக அரசின் சாத்தியக்கூறு அறிக்கையை பரிசீலிக்க கூடாது என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

கர்நாடகா திட்டம்

காவிரி ஆற்றில் புதிதாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள அணை மூலம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும், 400 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தவும் கர்நாடகா முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே, காவிரியில் உரிய நீரை வழங்க மறுப்பதாக கர்நாடகாவுடன் தமிழகத்துக்கு பிரச்சினை உள்ள நிலையில், புதிய அணை கட்ட தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகா வைத்த கோரிக்கையை பரிசீலிக்க கூடாது என  பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது,

முரணானது

கர்நாடகத்தின் இந்த நடவடிக்கை காவிரி நீர் விவகாரம் தீர்ப்பாயம் மற்றும் சுப்ரீம் கோர்ட் ஆகியவற்றின் இறுதிக் தீர்ப்பை மீறுவதாகும். எந்தவொரு புதிய திட்டங்களையும், இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக  முன்வைப்பதற்கு முன்னர் சம்பந்தபட்ட  மாநிலங்களுடனான ஒப்புதலுக்காக திட்டங்களை பகிர்ந்து கொள்ளுமாறு இந்திய அரசின் உத்தரவுகளுக்கு முரணாக இது உள்ளது. காவிரி நீர் விவகாரங்கள் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவு, அனைத்து மாநில அரசுகளாலும் நுகர்வோர் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் மொத்த அளவிலான தண்ணீரை பரிந்துரைக்கிறது. கர்நாடகா இந்த திட்டத்தை உருவாக்க வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது  நீர்த்தேக்கம் அமைக்கும் முயற்சி தீர்ப்பாயத்தின் இறுதி ஆணை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை மீறவதாகும்.

வாழ்வாதாரம் பாதிக்கும்

கர்நாடகா அரசு அதன் மேகதாது  திட்டத்திற்கான ஒப்புதலுக்காக தமிழக அரசை அணுகவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதற்கு பதிலாக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்முறைக்கு நேரடியாக மத்திய நீர் ஆணையத்தை அணுகி விட்டது. கர்நாடகாவின் இந்த ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கையானது, தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தையும், எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. காவிரி நீரைச் சார்ந்த லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அது பாதிக்கும்.

நிறுத்துமாறு அறிவுறுத்த....

கர்நாடக அரசின் சாத்தியக்கூறு அறிக்கையை பரிசீலனை செய்வதை நிறுத்துமாறு மத்திய நீர்வள ஆணைக்குழு, நீர் வழங்கல், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிர் அமைப்பை தாங்கள் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து