கருவறை முதல் கல்விச்சாலை வரை அனைத்தும் கட்டணமின்றி வழங்கும் ஒரே அரசு அம்மாவின் அரசு தான் பிரதமரின் நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      தமிழகம்
cm palanisamy 2017 06 02

சென்னை,கருவறை முதல் கல்விச்சாலை வரை அனைத்தும் கட்டணமின்றி வழங்கும் ஒரே அரசு அம்மாவின் அரசுதான் என்று பிரதமர் எழுதிய 'பரிட்சைக்கு பயமேன்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

கல்விக்கு முக்கியத்துவம்.... கற்றவன்தான் முழு மனிதனாக மதிக்கப்படுகிறான். இளமையில் கற்பதுதான் கல்வி. அதன்பிறகு கற்பது எல்லாம் அறிவும் அனுபவமும் தான். அந்த இளமைக்கல்வி தான் எதிர்கால முன்னேற்றத்தை தீர்மானிக்கிறது. அதனால்தான் குழந்தைகள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். குழந்தைகளை உளவியல் ரீதியாக அணுகி அவர்களுக்கு கற்பிப்பது ஒரு மாபெரும் கலை. ஒரு தாய்க்கு உள்ள பொறுப்பும், கடமையும், தியாக உணர்வும், சகிப்புத்தன்மையும் நிச்சயமாக ஆசிரியர்களுக்கும் அவசியம்  இருக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு உளவியல் அறிவு அதிகமாக இருக்க வேண்டும்.

பாராட்டுக்குரியது...அதனால்தான் பிரதமர் இந்த நூலுக்கு 'பரிட்சைக்கு பயமேன்' என்று பெயர் வைத்திருக்கிறார்.  நூலுக்குள் பரந்து கிடக்கின்ற ஆலோசனைகள் அனைத்தும்  மிக இலகுவாக புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு, மத்திய, மாநில போட்டித்தேர்வுகளை எளிதாக எதிர்கொள்கின்ற அளவிற்கு, தேர்வை எண்ணி அஞ்சும்படியான மன அழுத்தத்திலிருந்து விடுபடுகின்ற அளவிற்கு,  எந்தத்தேர்வு வந்தாலும் நான் எளிதாக எதிர்கொள்வேன் என்ற மனநிலையை ஒரு மாணவனுக்கு உருவாக்குகின்ற அளவிற்கு இந்த நூலில் பல செய்திகள் அடங்கி இருப்பது மிகவும் பாராட்டுக்குரியதாகும்.

கல்வி நிபுணருக்கான... இளைஞர் சக்தியை அதிகமாகக் கொண்டது இந்தியா. அவர்களை சரியான திசைகளில் வழி நடத்தினால் இந்தியா மிக விரைவில் உலக நாடுகளை வழி நடத்தும் தலைமை நாடாக மாறும் என்பதை இந்த நூலின் வழியாக பிரதமர் தெரிவித்திருக்கிறார். தேர்வுக்காக படிக்காமல் வாழ்க்கைக்காக படிக்க வேண்டும்.  அதுதான் உண்மையான கல்வி என்கிறார் நமது பிரதமர்.  கல்வி என்பது மாணவர்களை அச்சுறுத்துவதாக இருக்கக்கூடாது என்பதை பல இடங்களில் பிரதமர் வலியுறுத்துகிறார். மதிப்பெண் என்பது வேறு, அறிவு என்பது வேறு. மதிப்பெண் ஒருவருடைய அறிவுக்கான அளவுகோல் அல்ல என்று பிரதமர் உறுதியாகக் கூறியிருப்பது ஒரு தலைசிறந்த கல்வி நிபுணருக்கான சிந்தனையாகவே நான் கருதுகிறேன்.

முதல் வழிகாட்டி...இந்த நூல் ஒவ்வொரு மாணவனின் கையிலும், மனதிலும் எப்போதும் இருக்க வேண்டிய ஒரு வாழ்க்கை வழிகாட்டி நூல். தேர்வை இன்முகத்தோடு வரவேற்க வேண்டும். அதை ஒரு பண்டிகையைப் போல கொண்டாடி மகிழ வேண்டும். ஒரு குழந்தையைப் பற்றி அதிகமாக பெற்றோர்கள் தான் தெரிந்திருப்பார்கள்.  குழந்தைகள் படிக்கும் பாடத்திற்கும் வாழ்க்கையில் அதன் உபயோகத்திற்கும் உள்ள தொடர்பை பெற்றோர்கள் இயன்ற அளவு குழந்தைகளுக்கு விளக்க முயற்சி செய்ய வேண்டும்.  குழந்தைகளின் முதல் வழிகாட்டி பெற்றோர்கள்தான். இப்படிப்பட்ட அரிய கருத்துக்களை மிகத் துல்லியமாக இந்நூலில்  பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
உறுதியாகக் கூறுகிறேன்

அசுர வேகத்தில் மாற்றங்களை எதிர்கொண்டு வரும் கல்விச் சூழலில், உலக நாடுகளோடு போட்டி போடுகிற அளவிற்கு நம் நாட்டில் கல்வி நிலை  உயர வேண்டும் என்கிற பிரதமரின் எண்ணத்தை நிச்சயம் தமிழ்நாடு கல்வித் துறை நிறைவு செய்யும் என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். உயர் கல்விக்கு முக்கியத்துவம் தரும் அதே வேளையில் அடிப்படைக் கல்விக்கும் அதிக முக்கியத்துவம் தருகிறது தமிழ்நாடு கல்வித்துறை.  அம்மா கல்வித்துறையில் செய்த புரட்சிதான், இன்று நாம் கல்வியில்  மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரி மாநிலமாக சிறந்து விளங்குகிறோம். பள்ளிகளில் சேர்ந்து படிப்பது, தேர்வு எழுதுவது சம்பந்தமாக மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையே  நிலவும் மன இறுக்கத்தை  குறைக்க பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகள் அம்மாவின் அரசால் எடுக்கப்பட்டுள்ளது. 

அம்மாவின் அரசுதான்...அம்மாவாலும் மற்றும் அம்மாவின் அரசாலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொடர் முயற்சியின் பயனாக தொடக்க நிலை வகுப்புகளின் நிகர சேர்க்கை விகிதம் 99.86 ஆகவும், உயர் தொடக்க நிலையில் வகுப்புகளின் நிகர சேர்க்கை விகிதம் 99.22  ஆகவும் உயர்ந்துள்ளது. இது 100 விழுக்காட்டை விரைவில் எட்டும் என்றும் உறுதி கூறுகின்றேன்.  அதாவது கருவறை முதல் கல்விச்சாலை வரை அனைத்தும் கட்டணமின்றி வழங்கும் ஒரே அரசு அம்மாவின் அரசுதான்.

நடவடிக்கை எடுக்கும்... குழந்தை பருவம் குதூகலமாய்,  வண்ணத்து பூச்சிக்களாய் விளையாடி துள்ளி திரியும் காலம். பள்ளி சென்று பயில வேண்டிய காலம், குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து, மேம்படுத்தி அவர்களின் உரிமைகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது நமது கடமையாகும் என்றார் அம்மா. இந்த கருத்தும் இந்த நூலின் வழியாக பிரதமர் அறிவுறுத்தும் கருத்தும் ஒன்றாகவே இருப்பதால், இரண்டு தலைவர்களின் கல்வி சார்ந்த சிந்தனைகள் நம் நாட்டு குழந்தைகளின் முன்னேற்றத்தை மையமாக வைத்தே இருப்பதை உணர முடிகிறது. எனவே குழந்தைகளின் மனதை குதூகலமாக வைத்து, அவர்கள் எந்தவிதமான மனஇறுக்கமின்றி மகிழ்ச்சியாக கல்வி கற்று வாழ்வில் உயர்ந்து இந்த நாட்டையும் உயர்த்த அம்மாவின் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என உறுதி கூறுகிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து