முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 நாட்களில் 10 முக்கிய தீர்ப்புகள்- தயாராகும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடுத்த சில வாரங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில் பத்துக்கும் மேற்பட்ட அதிமுக்கியமான வழக்குகளில் அவர் தீர்ப்பு வழங்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

அவற்றில் அயோத்தி பிரச்னை, ஆதாருக்கு எதிரான வழக்குகள், ஓரினச்சேர்க்கைக்கு சட்ட அனுமதி கோரும் மனுக்கள், சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பதில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

அந்த வழக்குகள் அனைத்தும் நாட்டின் மொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளவை என்பதால், அவற்றின் மீது எத்தகைய தீர்ப்பை தீபக் மிஸ்ரா அளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.
65 வயதை எட்டப் போகும் தீபக் மிஸ்ரா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்  45-ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். நீதிபதி கர்ணனுக்கு சிறைத் தண்டனை விதித்தது, திரையரங்குகளில் தேசியகீதத்தை கட்டாயமாக்கியது, பசு பாதுகாவல் என்ற பெயரில் படுகொலை செய்யப்படுவதை கடுமையாக கண்டித்தது என பல சிக்கலான வழக்குகளை அவர் தலைமையிலான அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது.

மற்றொரு புறம், சக நீதிபதிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகி சர்ச்சைக்கும் ஆளானார் தீபக் மிஸ்ரா. வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக அவர் மீதுல சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகள் குற்றம்சாட்டியது அப்போது பரபரப்பு செய்தியானது.

அந்தக் குற்றச்சாட்டுகளை பெரிதாக பொருட்படுத்தாத தீபக் மிஸ்ரா, தொடர்ந்து பல்வேறு வழக்குகளை விசாரித்தார். ராமஜென்ம பூமி எனக் கருதப்படும் சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் எவருக்குச் சொந்தம்? என்பது தொடர்பான வழக்கை அவரது தலைமையிலான அமர்வே விசாரித்து வருகிறது. இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூலை 20-ஆம் தேதி அதன் மீதான தீர்ப்பை தீபக் மிஸ்ரா அமர்வு ஒத்திவைத்தது.

அதேபோன்று, ஆதாரை அரசு கட்டாயமாக்கியது செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் அவர் தலைமையிலான அமர்வு விசாரித்து கடந்த மே 10-ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.

ஓரினச்சேர்க்கையை குற்றமாக வரையறுக்கும் அரசியல் சாசனப் பிரிவு 377-ஆவது விதியை ரத்து செய்யக் கோரிய வழக்கும் தீபக் மிஸ்ரா எழுதப்போகும் தீர்ப்புக்காக காத்திருக்கிறது. இதைத் தவிர, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் குறிப்பிட்ட வயதிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது தொடர்பான வழக்கு, எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கக் கோரும் வழக்கு, குற்றவழக்கில் சிக்கிய அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கக் கோரிய வழக்கு உள்ளிட்டவற்றிலும் தீர்ப்பு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதியுடன் தீபக் மிஸ்ரா ஓய்வு பெற உள்ளார். இன்னும் 20 நாள்களே அவர் நீதிமன்றத்தில் பணியாற்றப் போகிறார். அதற்குள்ளாக இந்த அதிமுக்கிய வழக்குகள் அனைத்தின் மீதும் தீர்ப்பளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து