முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலேகான் வெடிகுண்டு வழக்கு: ராணுவ அதிகாரி கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மாலேகான் வெடிகுண்டு வழக்கில் சிறப்பு விசாரணை குழுவை கொண்டு விசாரணை நடத்த கோரும் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித்தின் கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.

2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் மாலேகானில் வெடிகுண்டு வெடித்தது. இதில் 7 பேர் இறந்தனர். இந்த வழக்கை மகராஷ்டிராவைச் சேர்ந்த தீவிரவாதத் தடுப்புப் படையினர் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் புரோஹித், சாத்வி பிரக்யா தாக்குர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மும்பையிலுள்ள சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இவர்கள் 9 பேர் மீதும் சட்டத்தை ஏ.டி.எஸ். அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் என்று கடந்த ஆண்டு சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு இந்த வழக்கை விசாரித்து வரு கிறது. இதனிடையே தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஸ்ரீகாந்த் புரோஹித், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதனிடையே சுப்ரீம் கோர்ட்டில் ஸ்ரீகாந்த் புரோஹித் புதிதாக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் அதில் கூறியுள்ளதாவது:

அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு நான் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளேன். என்னைக் கைது செய்த ஏ.டி.எஸ். போலீசார், என்னை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் கடத்திச் சென்று, 8 நாட்கள் அடைத்து வைத்து பயங்கரமாக துன்புறுத்தினர். என்னைக் கடத்திச் சென்று துன்புறுத்தியதற்காக எனக்கு நஷ்டஈடு தரவேண்டும். மேலும் இந்தக் கடத்தல், துன்புறுத்தல் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு மூலம் விசாரணை நடத்தவேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. புரோஹித் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜராகி வாதாடினார்.

ஆனால் புரோஹித்தின் கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மறுத்து விட்டனர். அவர்கள் கூறியதாவது: இந்த வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாங்கள் ஏன் இதில் குறுக்கிடவேண்டும்? இது விசாரணையை பாதிக்கக் கூடும். ஸ்ரீகாந்த் புரோஹித்தின் விவகாரத்தை அவர்கள் கவனித்துக் கொள்வார் கள். இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யவேண்டும் என் றால் விசாரணை நீதிமன்றத்தை புரோஹித் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து