மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி நிலம் மீட்பு: செல்லத்தம்மன் கோயில் பூசாரிகள் 6 பேர் டிஸ்மிஸ்

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      ஆன்மிகம்
meenakshi temple(N)

மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை, கோயில் அதிகாரிகள் மீட்டுள்ளனர். மேலும், போலி ஆவணங்கள் மூலமாக கோயில் நிலத்தை விற்க முயன்ற செல்லத்தம்மன் கோயில் பூசாரிகள் 6 பேர் நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் உபகோயிலான செல்லத்தம்மன் கோயிலுக்கு வழங்கப்பட்ட 2 ஏக்கர் 4 சென்ட் நிலம், எல்லீஸ் நகரில் உள்ளது. இதன் இப்போதைய மதிப்பு ரூ.50 கோடி. இந்நிலையில், அந்த நிலம் தங்களுக்குச் சொந்தமானது என செல்லத்தம்மன் கோயில் பூசாரிகள் உள்பட 12 பேர் வழக்குத் தொடர்ந்தனர். இந்நிலையில், அந்த நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என இனாம் ஒழிப்புத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே மேற்படி நிலத்தை, எல்லீஸ் நகர் குடியிருப்பு திட்டத்துக்கு வீட்டு வசதி வாரியம் ஆர்ஜிதம் செய்தது. ஆர்ஜிதம் செய்ததற்கான இழப்பீட்டுத் தொகையை தங்களுக்கு அளிக்க வேண்டும் என ஏற்கனவே வழக்குத் தொடர்ந்த பூசாரிகள் உள்ளிட்ட 12 பேர் மதுரை சார்பு நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கிலும் கோயிலுக்கு சாதமாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிமன்ற வழக்கு காரணமாக, ஆர்ஜிதம் செய்த நிலத்தை வீட்டுவசதி வாரியம் எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்புகளை மறைத்து, செல்லத்தம்மன் கோயில் பூசாரிகள் தங்களது மூதாதையர் பெயரில் போலியாகப் பட்டா பெற்று, அந்த நிலத்தை ரூ.2.10 கோடிக்கு விற்பனை செய்தனர். அதையடுத்து பூசாரிகள் 6 பேரும் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மற்றும் காவல் துறை உதவியுடன் மேற்படி நிலம் அண்மையில் கோயில் வசம் கொண்டுவரப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக விற்பனை செய்த செல்லத்தம்மன் கோயில் பூசாரிகள் 6 பேரை, நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்து மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணை ஆணையர் ந.நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து