திருப்பாலைக்குடி-கன்னிராஜபுரம் கிராமங்களில் பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      ராமநாதபுரம்
5 rmd pro

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி, கன்னிராஜபுரம் கிராமங்களில் பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியை கலெக்டர் வீரராகவராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்களம் வட்டத்திற்குட்பட்ட திருப்;பாலைக்குடி கிராமத்திலும், கடலாடி வட்டத்திற்குட்பட்ட கன்னிராஜபுரம் ஆகிய கிராமங்களில் நடத்தப்பட்ட சுனாமி பேரிடர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகையினை கொ.வீர ராகவ ராவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மத்திய அரசின் கீழ் ஹைதராபாத்தினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு, தமிழ்நாடு மற்றும் பிற கடலோர மாநிலங்களில் சுனாமி போன்ற இயற்கை பேரிடர் தொடர்பான தகவல்களை முன்னறிவிப்பு செய்து வருகின்றது. அந்த வகையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்தியாவில் உள்ள ஆந்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களிலுள்ள கடலோர மாவட்டங்களில் உள்ள கடலோர மாவட்டங்களில் குறிப்பிட்ட கிராமங்களைத் தேர்வு செய்து அந்த கிராமம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் சுனாமி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஒத்திகை நடத்திட அறிவுறுத்தியுள்ளது. 
 அதனடிப்படையில் இன்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட ஆர்.எஸ்.மங்களம் வட்டம், திருப்பாலைக்குடி கிராமத்திலும், பரமக்குடி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட கடலாடி வட்டம், கன்னிராஜபுரம் ஊராட்சி, ரோச்மாநகர் கிராமத்திலும் சுனாமி பாதுகாப்பு குறித்த ஒத்திகை நடத்தப்பட்டது. முதலாவதாக காலை 8.30 மணியளவில் இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு நிகரி வழியாக சுனாமி குறித்து முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டங்களில் நோடல் அதிகாரிகளான பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன் ஆகியோருக்கு சக்திமிக்க கருவி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகளுக்கு பேரிடர் கால முதன்மைப் பொறுப்பாளர்கள் தயார் நிலையில் இருக்கும்படி உஷார் படுத்தப்பட்டது. 
 தொடர்ந்து, காலை 8.45 மணிக்கு இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு மூலம் இரண்டாம் கட்ட  எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, மேற்குறிப்பிட்ட இரண்டு கிராமங்களிலும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதற்கு தேவையான வாகனங்கள், மீட்பு உபகரணங்கள் உட்பட அனைத்தையும் தயார் நிலையில் வைத்திட அறிவுறுத்தப்பட்டு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து, காலை 9.00 மணியளவில் மூன்றாம் கட்ட சுனாமி எச்சரிக்கையாக இந்தியாவின் கடற்கரை பகுதிகளுக்கு விடுக்கப்பட்டதையடுத்து, அந்தந்த கிராமங்களில் உள்ள பொதுமக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கு ஆயத்தப்படுத்தப்பட்டது.  இறுதியாக 9.15 மணியளவில் நான்காம் கட்ட எச்சரிக்கையாகலெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, திருப்பாலைக்குடி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் பல்நோக்கு புயல்காப்பக மைய கட்டிடத்திலும், ரோச்மாநகர் கிராம பொது மக்கள் அந்த ஊரில் உள்ள தேவாலயத்திலும் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட நோடல் அதிகாரிகள் தலைமையில்  பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் இந்திய கப்பற்படையும், ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டது.
 மீட்கப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவுப் பொருட்கள், காய்கறிகள், சமையல் பொருட்கள், குழந்தைகளுக்கான பால் பொருட்கள், மருந்து, மாத்திரைகள் உட்பட  மருத்துவ பரிசோதனை வசதிகள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.  இவ்வாறு திருப்பாலைக்குடி மற்றும் கன்னிராஜபுரம் ஆகிய கிராமங்களில் நடத்தப்பட்ட இப்பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் அந்தந்த கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:- சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களை தடுத்தி இயலாது. இருப்பினும் இத்தகைய  இயற்கைப் பேரிடர் ஏற்படும் பொழுது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை சீர் மரபு தவறாமல் சரியான முறையில் பின்பற்றினால் பொதுமக்களை பாதிப்பிலிருந்து பாதுகாத்திட முடியும். இத்தகைய மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்திய கப்பற்படை, வருவாய்த்துறை, பொது சுகாதாரத்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உள்ளிட்ட 12 துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றிடும் விதமாக குழுக்களை அமைக்கப்பட்டுள்ளன.   இதுபோன்ற மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமையினை உணர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட வேண்டும்.  இன்று நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியானது அலுவலர்களுக்கும்,  பொதுமக்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது.  இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய கிராம பொதுமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், இந்திய கப்பற்படை அதிகாரி விஜய்சிங், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள் மு.ரவிச்சந்திரன் (கீழக்கரை), விஜயகுமார் (திருவாடானை), மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை நிலைய அலுவலர்கள் கே.லிங்கம் (சாயல்குடி), ஜே.அருளானந்து (ஆர்.எஸ்.மங்களம்) உட்பட சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து