இந்த ஆண்டு முதல் தனியார் பள்ளிகளில் இணைய வழி மூலம் மாணவர்களை சேர்க்கும் திட்டத்திற்கு இதுவரை ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு - ஆசிரியர் தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      தமிழகம்
cm edapadi speech 2018 9 5

சென்னை : கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் இணையம் மூலம் தொடக்க வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்களை சேர்க்கும் இந்த திட்டத்திற்காக இதுவரை 400 கோடிரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தின் மூலம் 4 லட்சத்து 20 ஆயிரத்து 485 பயனடைந்துள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சர்வ பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது, தூய்மை பள்ளி விருது மற்றும் மாணவர்களுக்கான விருது ஆகிய முப்பெரும் விழா, கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது, தூய்மை பள்ளி விருது மற்றும் மாணவர்களுக்கான விருதுகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார் .

இரண்டு அறை...

அப்போது அவர் பேசியதாவது:-

எனக்கு கல்வி போதித்த என் ஆசிரியர்களையும், அரசியல் போதித்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை என் மனதில் நிறுத்தி, ஆசிரியப் பெருமக்களுக்கு என் நெஞ்சார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்வில் இரண்டு அதி முக்கிய அறைகள் உண்டு. ஒன்று, கருவறை - அம்மாவுடையது. மற்றொன்று, வகுப்பறை - ஆசிரியருடையது. அம்மா, வாழ்க்கையை தந்து உலகத்தை அறிமுகப்படுத்துகிறார்.

வாழ்த்துகள்...

இன்றைய தினம் தன்னுடைய சிறப்பான பணியின் காரணமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறும் 373 ஆசிரியர்களையும், தமிழ் வழி பயிலும் மாணவர்களின் அறிவார்ந்த செயல்பாட்டின் காரணமாக ‚ காமராஜர் விருது பெறும் 960 மாணவச் செல்வங்களையும் உளமார பாராட்டுகிறேன். சுத்தம் மற்றும் சுகாதாரம் சார்ந்து, பள்ளிகள் சிறப்பாக செயல்படுவதை அடையாளம் காட்டும் விதமாக, பாராட்டும் விதமாக மாநில அளவில் தூய்மைப் பள்ளி விருது பெறும் 40 பள்ளிகளைச் சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கும், அதன் பெற்றோர் ஆசிரியர் கழகங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிக நிதிஒதுக்கீடு

அறிவுசார் மனிதவளம் மேம்பாடு அடைய வேண்டுமெனில், அனைவருக்கும் தங்கு தடையின்றி தரமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்  அமுத மொழியை அடிப்படையாகக் கொண்ட கல்வித் துறையின் ஒவ்வொரு திட்டமும் வகுக்கப்பட்டும், செயல்படுத்தப்பட்டும் வருகிறது. கல்வித் துறைக்காகமுன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் அதிக நிதிஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப் பணிகளை செம்மையாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது. தொலை தூரத்தில் உள்ள பள்ளிகளினால் மாணவர்களின் கல்விக் கனவுதொலைந்து விடக் கூடாது என்பதற்காக கிராமங்கள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் 20 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாண்டு 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

ரூ.16 கோடி நிதி...

மாவட்டத்திற்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி வீதம் 32 பள்ளிகளைத் தேர்வு செய்து, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதுடன்,கல்வி கற்பிக்கும் தரத்தை உயர்த்தும் வகையிலும், ஒவ்வொரு பள்ளிக்கும் 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அவை மாதிரிப் பள்ளிகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக அரசு 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் போதிய கணினித் திறன்களை அடையும் வகையில், உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதன்படி 3,090 உயர்நிலை பள்ளிகளுக்கு தலா 10 கணினிகளும், 2,939 மேல்நிலை பள்ளிகளுக்கு தலா 20 கணினிகளும் மற்றும் அவற்றோடு தொடர்புடைய மின் கருவிகளும் வழங்கப்படும். இந்த ஆண்டு 11 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததை இத்தருணத்தில் நினைவுகூற விரும்புகிறேன்.

ஆசிரியர்கள் நியமனம்

ஆசிரியர்களின் பற்றாக் குறையினால், மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடு எந்தவிதத்திலும் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடாது என்ற உயரிய சிந்தனையில், அரசு, காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பி வருகிறது. அந்த வகையில் 4,362 ஆய்வக உதவியாளர்களும், 2,373 முதுகலை மற்றும் சிறப்பாசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். படித்த பின்பு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் தனித்திறன் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாட நூல்கள் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் அளவிற்கு தரம் மிக்கதாகவும், கருத்தாழம் மிக்கதாகவும்,கண் கவரும் வண்ணங்களோடும் நம் மாணவர்களின் கைகளில் தவழ்ந்து அறிவுப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி

இப்புதிய பாடத் திட்டங்களை சிறப்பான முறையில் கையாளக்கூடிய வகையில், ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இறுதி நேரத்தில் வெளியிடப்படும் தேர்வு காலஅட்டவணையால், மாணவர்கள் மன இறுக்கத்திற்கு ஆளாகும் நிலையினை மாற்றி, பத்தாம் வகுப்பு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகால அட்டவணையும், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதியும், கல்வியாண்டின் தொடக்கத்திலேயே திட்டமிட்டு வெளியிடுவதால், மாணவர்களின் மன அழுத்தம் நீக்கப்படுகிறது. அரசு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி 2 நிமிடங்களுக்குள் குறுஞ்செய்தி மூலம் மாணவர்களுக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அனுப்பப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது.

ரூ. 400 கோடி...

மாணவர்களுக்கும் அவர்தம் பெற்றோருக்கும்கல்வி தொடர்பான ஐயங்களை தெளிவு படுத்திக் கொள்ளும் வகையில்14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு, மாணவர்களிடமும் அவர்தம் பெற்றோரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்பில் பயிலும் 15 லட்சம் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பிற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இவ்வாண்டு முதல் இணைய வழியில் தனியார் பள்ளிகளில் தொடக்க வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதுவரை இத்திட்டத்திற்காக 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 4 லட்சத்து 20 ஆயிரத்து 485 மாணவச் செல்வங்கள் பயனடைந்துள்ளனர்.

பள்ளி மற்றும் பள்ளிசார் செயல்பாடுகளின்போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்குஎதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு, இறப்பு நேரிடின் ஒரு லட்சம் ரூபாயும்,பெரிய காயங்கள் எனில் 50 ஆயிரம் ரூபாயும், சிறிய காயங்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், விபத்து ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள்அவர்களின் குடும்பத்தாரிடம் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. 2017-18-ம் ஆண்டிற்கானபள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்படும் பள்ளிகள் கண்டறிந்து, ஒரு மாவட்டத்திற்கு தலா ஒரு தொடக்கப் பள்ளி, நடுநிலை பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என 4 பள்ளிகளுக்கு‚ புதுமைப் பள்ளி என்ற விருதும்,தொடக்க பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ஒரு லட்சமும், மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 2 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

புதுமை பள்ளி விருது

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், இந்த ஆண்டு 16 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், 16 நடுநிலைப் பள்ளிகள், 12 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 12 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 56 பள்ளிகள் புதுமை பள்ளி விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட புதுமைப் பள்ளி விருதுகள் மற்றும் பரிசுத் தொகையாக 80 லட்சம் ரூபாய் என்னால் 9.7.2018 அன்று வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று, அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த முறையில் கணினியை பயன்படுத்த மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர், குழந்தைகள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்கள் என மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்கள் வீதம் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும்‚ கனவு ஆசிரியர் விருது மற்றும் தலா 10,000/- ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை செயலாக்கும் வகையில், 140 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு கனவு ஆசிரியர் விருது என்னால் 9.7.2018 அன்று வழங்கப்பட்டது.

ரூ.78 ஆயிரம்...

தமிழ்நாட்டிலுள்ள 242 பள்ளிகளில்இடைநிலை வகுப்பில் பயிலும் மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ மற்றும் டேக்வாண்டோ போன்ற தற்காப்புக் கலைப் பயிற்சிகள் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்ட 21 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில். 100 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அயல்நாட்டு சுற்றுலாவிற்கு அனுப்பப்பட உள்ளனர். இப்புதுமை நிகழ்விற்காக 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் பேசினார்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து