முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடையாளத்தை வெளியே கூறாமல் கேரள நிவாரண முகாம்களில் சேவை செய்த கலெக்டர்

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,8 நாட்களாக அடையாளத்தை வெளியே கூறாமல் கேரள நிவாரண முகாமிலும், லாரியில் பொருட்கள், ஏற்றும், இறக்கும் பணிகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் வேலை செய்துள்ளார். 9-வது நாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற விவரம் வெளியே தெரிந்ததும் எந்தவிதமான பரபரப்பின்றி தான் பணியாற்றும் இடத்துக்கே சென்று விட்டார்.

கேரள மாநிலத்தில் :தாதர் மற்றும் நாகர் ஹாவேலி யூனியன் பிரதேசத்தில் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருபவர் கண்ணன் கோபிநாதன். இவர் கடந்த மாதம் 26-ம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. ஒரு கோடிக்கான காசோலையை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ஒப்படைக்க வந்தார். காசோலையை முதல்வரிடம் ஒப்படைத்த கண்ணன் அங்கிருந்து தனது சொந்த கிராமமான திருச்சூர் அருகே இருக்கும் புத்தம்பள்ளிக்குச் செல்லவில்லை, தனது குடும்பத்தினரையும் சந்திக்கவில்லை.

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட செங்கனூர் பகுதிக்குக் கண்ணன் கோபிநாதன் சென்றார். அங்குள்ள நிவாரண முகாமுக்குச் சென்ற கண்ணன் தன்னை ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று அங்கிருந்த யாரிடமும் கூறாமல் நிவாரண முகாம்களில் சேவை செய்யும் தன்னார்வலர்களில் ஒருவராக மக்களுக்கு உதவிச் செய்யத் தொடங்கினார்.

கொச்சி துறைமுகத்தில் இருந்து லாரியில் இருந்து வரும் பொருட்களை இறக்குதல், மற்ற நிவாரண முகாம்களுக்குத் தேவையான பொருட்களைப் பிரித்து அனுப்புதல், மக்களுக்கு உணவு பரிமாறுதல் தலையில் சுமந்து சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பொருட்களை அளித்தல் போன்ற பணிகளில் கண்ணன் தீவிரமாக ஈடுபட்டார்.

ஏறக்குறைய 8 நாட்கள் ஒரு சாதாரண தொழிலாளி போன்று அனைத்துப் பணிகளையும் கண்ணன் செய்தார். இந்நிலையில், 9-வது நாள் கண்ணன் யாரென்று அங்கிருந்த அரசு அதிகாரிகள் சிலர் கண்டுபிடித்தனர். அதன்பின் கண்ணன் அதிகாரி என்று தெரிந்தவுடன் மிகவும் பணிவுடன் நடந்து கொண்டனர், சிலர் மன்னிப்பும் கேட்டனர். சிலர் செல்பி எடுத்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

கேரளாவில் இருந்து தாதர் நாகர் ஹாவேலிக்குச் சென்று, கேரளாவில் 8 நாட்கள் நிவாரண முகாமில் பணியாற்றிய நாட்களை தன்னுடைய விடுமுறையில் கழித்துக்கொள்ள கண்ணன் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அதைக் கண்ணனின் விடுப்பில் இருந்து கழிப்பதற்கு பதிலாக, அலுவலகப் பயணமாகவே நிர்வாகம் எடுத்துக் கொண்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து