ராஜீவ் காந்தி கொலை கைதிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் - சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      இந்தியா
Supreme Court(N)

புது டெல்லி : ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

உரிய முடிவு...

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். இந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து அரசு உரிய முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.

தீர்மானம்...

இதைத் தொடர்ந்து 7 பேரையும் விடுதலை செய்யப் போவதாக தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 7 பேரின் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அவர்களின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தது. இந்நிலையில் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது.

தமிழக அரசு...

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன்சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. 7 பேரின் விடுதலை குறித்து கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இதற்கு எதிரான மத்திய அரசின் வழக்கையும் சுப்ரீம் கோர்ட் முடித்து வைத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

முதல்வருடன்...

இது குறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறிய போது, ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே அம்மாவின் கொள்கையாக இருந்தது. இது தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. எனவே இந்த விஷயத்தில் முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து