முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா அன்றே நிறைவேற்றிய தீர்மானம் 7 பேர் விடுதலைக்கு இன்று வித்திட்டுள்ளது

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்காக கடந்த 2014-இல் தமிழக சட்டசபையில் முதல்முறையாக அன்றைய முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். அதுவே உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் தற்போது அவர்கள் விடுதலைக்கு வழிவகுத்துள்ளது.

கடந்த 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி வந்திருந்தார். அப்போது அவர் மனித வெடிகுண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயல், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் 2014-ம் ஆண்டு பிப் 18-ம் தேதி ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்தது.

அத்துடன் 23 ஆண்டு காலம் சிறையில் இருந்ததால் அவர்கள் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த கோரிக்கை தமிழகம் முழுவதும் வலியுறுத்தப்பட்டது.இதைத் தொடர்ந்து தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014 பிப்ரவரி 19-ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மாநில அரசுக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தூக்கு ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும் உடனே விடுதலை செய்ய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.

அதே போல் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை விடுதலை செய்யவும் முடிவு எடுத்துள்ளது. மேலும் ராஜீவ் வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யவும் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவு குறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்துவோம். மத்திய அரசு 3 நாட்களுக்குள் பதில் தெரிவிக்காவிட்டால் மாநில அரசு அனைவரையும் விடுதலை செய்யும் என்றார். ஆனால் மத்திய அரசு இதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது.

இந்த நிலையில் 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தற்போது தீர்ப்பு அளித்து இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது. எனவே ஜெயலலிதா அன்று நிறைவேற்றிய தீர்மானம்தான் இன்று 7 தமிழர்கள் விடுதலைக்கு வித்திட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து