உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க தேசிய மாநாட்டு கட்சி முடிவு

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      இந்தியா
Farooq Abdullah 2017 03 20 0

ஜம்மு,ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலை புறக்கணிக்க தேசிய மாநாட்டுக் கட்சி முடிவு செய்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகர பஞ்சாயத்துகளுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்திலும், பஞ்சாயத்து அமைப்புகளுக்கு நவம்பர்-டிசம்பர் மாதத்திலும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டு கட்சியின் உயர் நிலைக் குழு கூட்டம்  நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குப் பிறகு, அக்கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 35ஏ பிரிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து, தேசிய மாநாட்டுக் கட்சியின் உயர்நிலை குழு ஆலோசித்தது.

35ஏ சட்டப் பிரிவில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால், அது மாநிலத்துக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பேரழிவை தரும் என்று கட்சியின் உயர்நிலை குழு கருதுகிறது.இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும், மாநில அரசும் கடைப்பிடித்து வரும் நிலைப்பாடு, மாநில மக்களின் விருப்பங்கள், குறிக்கோள்களுக்கு எதிராக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில நிர்வாகம் அவசர கதியில் முடிவெடுத்துள்ளது.

35ஏ சட்டப் பிரிவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள மனுக்களை தொடர்ந்து, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை பரிசீலிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, 35ஏ சட்டப் பிரிவு விவகாரத்தில் தங்களது நிலைப்பாடு என்ன என்பதை மத்திய அரசும், மாநில அரசும் தெளிவுப்படுத்தாத வரையிலும், நீதிமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அந்த சட்டப்பிரிவை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரையிலும், உள்ளாட்சித் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி கலந்து கொள்ளக் கூடாது என்று உயர்நிலைக் குழு முடிவு செய்துள்ளது என்றார் பரூக் அப்துல்லா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து