உயர்கோபுரத்தில் ஏறி பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      ராமநாதபுரம்
rmd news

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தகவல் தொடர்பு உயர்கோபுரத்தில் ஏறி பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ராமநாதபுரம் ஆதம்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜமீல்கான் என்பவரின் மனைவி ஆயிஷா(வயது35). இவர் நேற்று காலை ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள தகவல் தொடர்பு உயர்கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். இவரின் கூச்சல் சத்தம் கேட்ட போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து சென்று சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். ஆயிசாவிடம் பேச்சு கொடுத்தபடியே மேலே ஏறிய போலீசார் அவரை பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர். இதுகுறித்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கணவருக்கு வழங்கப்பட்ட பூர்வீக சொத்தின் பங்கில் கிடைத்த ரூ.40 லட்சம் பணத்தினை கணவரின் தங்கை நூர்ஜகானிடம் கொடுத்திருந்தாராம்.
    இந்த பணத்தினை திருப்பி தராமல் நூர்ஜகான் ஏமாற்றி வந்துள்ளார். இதுதொடர்பாக போலீசில் புகார் செய்த நிலையில் பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் இல்லாததால் போலீசார் ஆதாரங்கள் தருமாறு கேட்டுள்ளனர்.இதனால், தனக்கு பணம் கிடைக்க வழிஇல்லையே என்ற விரக்தியில் ஆயிசா தற்கொலை முயற்சியில் இறங்கியது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அறிவுரை கூறியதோடு, ஆதாரங்கள் கொண்டுவந்து கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக கூறி ஆயிசாவை அனுப்பி வைத்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து