முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறியரக ராக்கெட், விண்கலங்கள் தயாரிப்பில் தனியாருக்கு வாய்ப்பு: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர், சிறியரக ராக்கெட், விண்கலங்கள் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்க வாய்ப்பளிக்கப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

இந்திய தொழில்கூட்டமைப்பு மற்றும் ஆந்த்ரிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரில்  நடைபெற்ற பெங்களூரு விண்வெளி கண்காட்சி-2018'-ஐ தொடக்கிவைத்து அவர் பேசியதாவது:
ராக்கெட் மற்றும் விண்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சி, வடிவமைப்பு, தயாரிப்பு பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. ராக்கெட், விண்கலங்களில் பயன்படுத்தப்படும் சிறுசிறு கருவிகள், துணைப் பொருள்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்து தயாரித்து பெற்று வந்துள்ளோம்.
பிஎஸ்எல்வி ராக்கெட்டில் 85-90 சதவீத தயாரிப்பு செலவு தனியார் நிறுவனங்களுக்கே வழங்கப்படுவது போல விண்கலத்தின் 50 சதவீத தயாரிப்பு செலவும் தனியாருக்கு அளிக்கப்படுகிறது. தனியாரிடம் வாங்கிய துணைப் பொருள்கள், கருவிகளை ஒருங்கிணைத்து முழுமையான ராக்கெட், விண்கலங்களைத் தயாரித்து வந்தோம்.

இதை விரிவுபடுத்தி, ராக்கெட் மற்றும் விண்கலங்களைத் தயாரிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனங்களிடமே அளிக்கவிருக்கிறோம்.
அண்மைக் காலமாக விண்கலங்கள் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களை அதிகளவில் ஈடுபடுத்தி வருகிறோம். இஸ்ரோவின் செயல்பாட்டில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்துவருகிறது.
ஆரம்பநிலை தொழில்முனைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தியாவின் 6 முக்கிய நகரங்களில் தொழில் காப்பு மையங்களை அமைக்கவிருக்கிறோம். இந்தத் திட்டத்தில் சிறியவகை நிறுவனங்களும் பயனடையமுடியும்.

பிரதமர் நரேந்திர மோடி, 40 ராக்கெட்களை தயாரிக்க ரூ.10,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்.

இதில் 30 பிஎஸ்எல்வி, 10 ஜி.எஸ்.எல்.வி.-யும் தயாரிக்கப்படும். இந்தத் திட்டத்தில் ரூ.9 ஆயிரம் கோடி தனியார் நிறுவனங்களுக்கே செலவழிக்கப்படும். தற்போது இந்தியாவிடம் 45 விண்கலங்கள் உள்ளன.  இதுதவிர தொலை உணர்வு, உயர் அகன்ற கற்றை தகவல் தொடர்பு போன்றவற்றுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 59 விண்கலங்களைத் தயாரிக்கவிருக்கிறோம். தயாரிப்புப் பணிகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களிடமே அளிக்கப்படும். தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு இல்லாமல் ராக்கெட், விண்கலங்களை இஸ்ரோவால் தயாரிக்க முடியாது. செலவு குறைவு என்பதால் சிறியரக விண்கலங்கள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.

அடுத்தசில ஆண்டுகளில் சுமார் 11 ஆயிரம் விண்கலங்கள் தேவைப்படுகின்றன. சிறியரக விண்கல சந்தையை சரியாக பயன்படுத்திக் கொள்வதற்காக 500-7000 கிலோ எடை கொண்ட விண்கலங்களை விண்ணில் செலுத்துவதற்கு புதுமையான சிறியரக ராக்கெட்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.  இந்த ராக்கெட்டை முழுமையாக தானியங்கி மூலம் கட்டமைக்க 72 மணி நேரம் மட்டுமே ஆகும். இந்த ரக ராக்கெட்கள் ஆண்டுக்கு 56-60 தேவைப்படுகின்றன. சிறியரக ராக்கெட்களை தயாரிக்கும் பணி தொடங்கியதும், அப் பணியும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். அடுத்த 4 ஆண்டுகளில் இஸ்ரோவின் முழுக் கவனமும் ககன்யான் எனப்படும் விண் மனிதன் திட்டத்தை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். விண்வெளி வர்த்தகத்தை செயல்படுத்துவதற்கான கொள்கைகளையும் வகுத்து வருகிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து