ரூ.5 கோடி செலவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம் நிறுவப்படும்: சென்னை பல்கலை., விழாவில் முதல்வர் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      தமிழகம்
Chennai University 2018 09 07

சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம் 5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற சென்னை பல்கலைக் கழகத்தின் வைர விழா ஆண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 

நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், மாணவர்களிடையே பேசும் போது, வரலாற்றின் பக்கங்களில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. உலகத்தினரை அதை படிக்க வைப்பது நமது கையில்தான் உள்ளது என்றார்.  அவர் கூறிய  அந்த நிலையை அடைய வேண்டுமென்றால்,  முதலில் நமக்கு திடமான லட்சியம் வேண்டும். அதை அடையக்கூடிய அறிவைத் தேடிப்  பெற வேண்டும். அதற்கு கடின உழைப்பு வேண்டும். பிரச்சனைகளை கண்டு பயப்படக்கூடாது.  பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.  விடா முயற்சி வேண்டும்.  எல்லாவற்றிக்கும் மேலாக நல்ல ஒழுக்கம் வேண்டும்.  குடும்பத்திற்கும், நாட்டிற்கும், உலகிற்கும்  நல்லதொரு அங்கமாக இருப்பேன் என்ற உறுதி உங்களுக்கு இருக்க வேண்டும். 

நீங்கள் அனைவரும் சமுதாயத்தில் பொறுப்புள்ள மனிதர்களாக இருக்க வேண்டும். ஏட்டுக் கல்வி மட்டுமே வாழ்க்கைக்கு போதாது. அத்துடன் பொது அறிவையும், சமயோசித அறிவையும் வளர்த்துக்  கொண்டால்தான் வாழ்க்கையில் உண்மையிலேயே வெற்றி பெற முடியும். தான் படித்த கல்வியை சமயோசித முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறும் வகையில்  மாற்றியமைத்துக் கொண்டு,  மாணவர்கள்  செயல்பட வேண்டும். 

எதிர்கால தலைமுறையினரும் பேசக் கூடிய வகையில் நீடித்த சீர்திருத்தங்களை கல்வித்  துறையில் நடைமுறைப்படுத்த அம்மாவினுடைய அரசு உறுதி பூண்டுள்ளது.  தரமான கல்வி நிறுவனங்கள் மூலம் மனித வள மேம்பாட்டை ஊக்குவித்து, உயர்தரம் வாய்ந்த கல்வியாளர்களை உருவாக்குவதும்,  தமிழ்நாட்டை கல்வியின் ஒரு பன்னாட்டு மையமாக உருவாக்குவதும்  அம்மாவின் அரசின் லட்சியம். 

சென்னை பல்கலைக் கழகத்தில்  அண்ணா பொது வாழ்வியல் மையம்,  திராவிட ஆய்வு மையம்,  இணைய தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு மையம் ஆகியவை தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டது.  அந்த வகையில், இப்பல்கலைக் கழகத்தின் 160-ம் ஆண்டு விழா மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா  ஆகியவற்றினை குறிக்கும் வகையில் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம் 5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.  இந்த மையத்தின் மூலம் எம்.ஜி.ஆரின்  முன்னோடி திட்டங்களான சத்துணவு திட்டம் மற்றும் கல்வி, சுகாதாரம், மகளிர் வளர்ச்சி தொடர்பான திட்டங்கள் குறித்து கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை பல்கலைக் கழகத்தில் உள்ள நூலக கட்டிடம், மணிக்கூண்டு கட்டிடம், ஓரியண்டல் கல்வி நிறுவன கட்டிடம் மற்றும் நூற்றாண்டு கட்டிடம் ஆகிய  புராதன கட்டிடங்களை தொன்மையை பாதுகாத்து பழுது பார்த்தல், புதுப்பித்தல் ஆகிய பணிகளுக்காக தமிழ்நாடு அரசால் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.  இந்த மாணவச் சமுதாயம் நாளைய இந்தியாவை, தமிழகத்தை ஆளக்கூடிய சமுதாயம். இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கக்கூடிய வயது உங்களுடைய வயது. இந்த வயதில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டிய நிலையிலே நீங்கள் இருக்கின்றீர்கள். பிற்காலத்திலே உங்களுடைய வாழ்க்கை சிறக்க வேண்டுமென்று சொன்னால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து