கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பது முற்றிலும் நிறுத்தம்

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      இந்தியா
krishna rajasagar(N)

பெங்களூரு, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்று விட்டதால் கர்நாடகா, தனது அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பை நேற்று முதல் முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.

கர்நாடகாவில் கடந்த மாதம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்ததால், கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து சுமார் 3 லட்சம் கன அடி தண்ணீர் வரும் வகையில் நீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நீர் மட்டம் கடந்த 2 மாதங்களாக 120 அடி என்ற முழு கொள்ளளவில் இருந்தது. இந்த நிலையில் மழை குறைந்ததால் நீர் திறப்பை கர்நாடகா குறைத்தது.

தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்று விட்டதால் நேற்று கர்நாடகா, தனது அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பை முற்றிலுமாக நிறுத்தி விட்டது. கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணை ஆகியவற்றில் இருந்து நேற்று சுத்தமாக தண்ணீர் வெளியேறப்படவில்லை.

தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டமும் குறையத் தொடங்கியுள்ளது. நேற்று மதியம் நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 119.50 அடியாக உள்ளது. அணையில் இருந்து சுமார் 6800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து