ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த போது சி.சி.டி.வி. பதிவுகளை நிறுத்த உத்தரவிட்டது யார்? அப்பல்லோவுக்கு ஆணையம் கேள்வி

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      தமிழகம்
apollo 2017 9 27

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்ட போது அப்பல்லோ மருத்துவமனை சி.சி.டி.வி. பதிவுகளை நிறுத்த உத்தரவிட்டது யார் என்று மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபா் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் உறவினா்கள், முன்னாள் தலைமைச் செயலா்கள், அரசு மருத்துவா்கள், அப்பல்லோ மருத்துவா்கள், சசிகலாவின் உறவினா்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனா். சாட்சியம், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தவா்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞா்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதன் தொடச்சியாக நேற்று அப்பல்லோ நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் ஆணையத்தின் முன் ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கேட்டுள்ள கேள்விகளாக கூறப்படுவதாவது:- 

ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக, பேஸ்மேக்கர் பொருத்தும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு என்றுதான் மருத்துவமனைக் செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு ஒரு செய்திக் குறிப்பை வெளியிட அனுமதி அளித்தது யார் ?

அதேபோல் ஜெயலலிதா சிகிச்சையின் போது, அப்பல்லோ மருத்துவமனையின் குறிப்பிட்ட பகுதிக்கான சி.சி.டி.வி. பதிவுகளை நிறுத்த உத்தரவிட்டது யார்? சுமார் 75 நாட்கள் அவர் அங்கு தங்கி சிகிச்சை பெற்றுள்ளார். அவர் அனுமதிக்கப்பட்ட தருணம் அல்லது சோதனைக்காக பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பொழுது பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் என்ன ஆனது? எனவே அங்கு பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளிட்ட மொத்த சி.சி.டி.வி. பதிவுகளை இன்னும் 7 நாட்களுக்குள் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து